தேடலும் தேடல் நிமித்தமும்..

Saturday, August 2, 2008

அமீபா To அகிலாண்டம்

பூமியின் சுற்று அதற்கான விதிகளுடன் தடையுறாது சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது...ஆனால் அதன் முக(ங்கள்)ம் மட்டும் அது சார்ந்த விலங்கின் மிச்சங்களால் கிழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது,
ஜாதி,மதம்,இனம்,மொழி,விஞ்ஞானம் என அதன் கூர் நகங்களால் குதறப்பட்டுக்கொண்டே வருகிறது.
விஞ்ஞானத்தால் சிற்சில நன்மை இருப்பினும் அதன்வீச்சு பஞ்சபூதங்களையும் பகைத்துவிட்டது.
வானைத்துளைத்து ஓசோன் ஓட்டை இடுவதிலும்,காற்றைக் கிழித்து கார்பன் துகள்கள் நடுவதிலும்,தன் கழிவுகளால் நீரின் மூலக்கூறுவையே மாற்றுவதிலும்,பச்சை விரிக்கும் காடுகள் அழித்து கான்கிரீட் காடுகள் அமைப்பதிலும்,திட வடிவில் நெருப்பை ஏவி குண்டுகள் என கும்மாளமிடுவதிலும்..புல் பூண்டு,புழு பூச்சிகள் முழைக்காவண்ணம் கதிவீச்சுக்களின் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதிலும் என விஞ்ஞானத்தி வீச்சு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது...
எங்கும் வன்முறை ,மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் பயங்கரம்,சுடப் பட்டும்,சுட்டுக்கொண்டும் இருக்கும் கொடூரம் என இதே நிலை இன்னும் நீடித்தால் மூன்று பகுதி நீரால் நிரம்பியிருக்கும் பூமி மிச்சமுள்ள ஒரு பகுதியையும் நீரால் நிரப்பக்கூடும்,அந்த நீர் மனித இனத்தின் கண்ணீராகவும் மானுடக்குருதியின் செந்நீராகவும் இருக்கக்கூடும்.
அட மனிதப்பாவிகளே!
உலகம் இப்படித்தான் இருந்தது என்று நாளைய உயிருக்கு எடுத்துச் சொல்ல ஓர் உயிர்தடையத்தையாவது விட்டுச் செல்வோமே..!!!
ஏனெனில் இனி சாத்தியமில்லை அமீபா தொடங்கி,அகிலமும் நிரம்பும் பரிணாம வளர்ச்சி.


Sunday, July 27, 2008

இப்படிக்கு தீவிரவாதி....

எங்கள் கடவுள்
ஒரு இரத்தக் காட்டேறி!

மானிடக் குருதியே
அவர்தம்
அபிசேகத்திற்குரியது என்பதாலும்,
அபிசேகப் பிரியர்
அவர் என்பதாலும்

மானுடக் குவியலைக்
கொன்று குவிக்கிறோம்
கடவுளின் போர் என
வென்று மகிழ்கிறோம்.....

எங்களின்
சந்தோசம்
நிம்மதி
மோட்சம்
முக்தி
எல்லாம் எல்லாம்
மனிதக் குருதியே...

எங்களின் கொள்கை
இரத்தம்!இரத்தம்!இரத்தம்!

எங்களின் இலட்சியம்?!
இது வரை தெரியாது...

எங்கள்
தாயின் மார்புகள்
பால் சுரப்பதை விட
இரத்தம் சுரப்பதையே
அதிகம் விரும்பும்
வித்தியாசப் பிறவிகள்
நாங்கள்..

எங்கள் பூங்காக்களை
புல்லட்டுகள் பூப்பிக்கவே
பயன்படுத்துவோம்...

ஆலயங்கள் தோறும்
அணுகுண்டு விளைவித்து
எங்கள்
மகசூலைப் பெருக்குவோம்..

எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..

மனித வெடிகளாய்
எம்மையே சமைப்போம்..

தாத்தா,பாட்டி
அம்மா,அப்பா
மாமா,மாமி
சித்தப்பா,சித்தி
அண்ணன்,அக்கா
தம்பி,தங்கை
மருமகன்,மருமகள்
மதனி,கொழுந்தியா என
உங்களைப் போல்
உறவுகள்சொல்லி
சிரித்து வாழ
எங்களால் இயலாது...

ஏனெனில்
நாங்கள்
விலங்கின் கடைசி மிச்சம்..

விலங்குகட்கு ஏது
சிரிப்பு?

ஆமாம்!
மனிதனைக் கொல்கிறோம்
மனிதனைக் கொல்கிறோம்
என்று
மார்தட்டிக்கொள்(ல்)கிறோமே...

அப்படியானால்.....
நாங்கள்.....???????????????

இப்படிக்கு
தீவிரவாதி......


இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சந்திப்பு


இயக்குனர் இமையம் திரு பாரதி ராஜா மற்றும் மலேசிய அமைச்சர் திரு டத்தோ சாமிவேலு ஆகியோருக்கான தசாவதார படத்திற்கான சிறப்புக் காட்சி four frames studio வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....இயக்குனர் இமைய உபயத்தால் அடியேனும் அந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்....அப்பொழுது இயக்குனர் திரு கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து விவாதித்தேன்....சில விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது....முன்னதாக அவரது அயராத உழைப்பின் சாதனைக்கு தலைவணங்கினேன்....இணையதள விமர்சனங்கள் குறித்த எனது பதிவையும் அவரிடம் காண்பித்தேன்...
(அலை பேசியில் படம் பிடித்தவர் அறைகுறையாய் படம்பிடித்துவிட்டார்)


Friday, June 20, 2008

தசாவதாரம் Vs விமர்சனங்கள்

வலைபூக்களில் சமீபத்தில் பெரிதும் பதிவிடப்பட்டது தசாவதாரம் திரைப் படம் குறித்த விமர்சனங்களே...

விமர்சனம் மிக முக்கியம் என கருதுபவன் நான்,,நான் ரசிகனாய் இருப்பதை விட விமர்சகனாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்..நம் பார்வைத் தரம் உயர்ந்துள்ளதும் வரவேற்கத் தக்கதே..அதற்காக விளையாட்டுக்காய் விமர்சித்துத் தள்ளாதீர்கள்....

விமர்சனங்களே கலைஞனை செதுக்குகிறது,குறைகளை நிறைமதியோடு சுட்டிக்காட்டினால் நிச்சயம் கலைஞன் அதை ஏற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்வான்...

நுணுக்கமான செதுக்கல்களே கல்லை சிற்பமாக்கும்..உங்கள் விமர்சனங்கள் கலைஞனை செதுக்கும் உளியாகமட்டுமே இருக்கட்டும் தயவு செய்து கடப்பாறை கம்பி எடுத்து காயப்படுத்தாதீர்கள்..
சொல்லுதல் யார்க்கும் எளியதுதான்...நம்மால் பிரசவ வலியை பார்க்கத்தான் முடியும் ஆனால் உணர்வு என்பது அந்த குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்குமட்டுமே பரீட்சையம்.....visual படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

என்னதான் ஒரு சினிமா படைப்பாளி தான் நினைத்ததை,தன் வாழ்வில் அள்ளிமுடித்த யதார்த்தங்களை,கதாப்பாத்திரங்களை,காட்சிப்பதிவுகளை அப்படியே திரையில் கொண்டுவர நினைத்தாலும் அதற்கு அவர்மட்டும் நினைத்தால் போதாது அவரோட மனநிலைக்கு,எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஒத்துப்போகக்கூடிய சக கலைஞர்களின் ஒத்துழைப்பு தேவையானதாக இருக்கிறது...இதில் யாரேனும் ஒருவரால் சிறு தவறு நிகழ்ந்தாலோ அல்லது படைபாளியின் எண்ணஓட்டத்திலிருந்து வேறுபட்டு நின்றாலோ அந்த படைப்புத் தரத்தை குறைத்து மதிப்பிட அதுவும் ஒரு காரணமாகிவிடும்...அதற்காக ஒட்டுமொத்த படைப்பையும்,ஒட்டுமொத்த உழைப்பையும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
அதுவும் உலகத்தரத்திற்கு தம்மையே முழுமையாக அர்ப்பணித்து..நம் தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு தன் நிலைகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்துவரும் கமல் போன்ற மாபெரும் கலைஞனை,அவர் பணியை குறையிட்டு சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

தமிழ்மணம் போன்ற பெரும் வளைத்தளங்களில் பசியாறலாம், உணவு பறிமாறலாம், அதில் எதற்கு விஷத்துளி?

எத்தனையோ வாசகர்கள் ,எத்தனையோ பதிவர்கள் ஒவ்வொரு நொடியும் இதுபோன்ற வளைத்தளங்களை சொடுக்குகிறார்கள்,
ஒருவேளை தேடல்,தேடல் என்று தீரா தாகத்தோடு திரியும் கலைஞானி கமல் அவர்களும் தசாவதாரம் குறித்த விமர்சனங்களை படிக்க நேர்ந்தால்?
அதுவும் "தசாவதாரம் படத்த பார்க்க போனதுக்கு என் புத்தியை செருப்பாலதான் அடிக்கோனும்"போன்ற விமர்சனங்களை பருக நேர்ந்தால்?அவர் மனம் என்னபாடு பட்டிருக்கும்..
படம் பார்த்துவிட்டோ அல்லது கமல் அவர்களை பிடிக்காது போயிருந்தோ இது போன்ற தலைப்பை பதிவிட்டிருக்கிறாரா எனறால் இல்லை "டிக்கெட் கிடைக்காது எழுந்த கோபத்தின் உச்சமாக அல்லது வலைப்பூவின் வசீகரத்திற்காக அப்படி பதிவிட்டிருக்கிறார்..என்ன கொடுமை இது?????!!!

நுனிப்புல் மேய்கிறவற்கள் அந்த தலைப்பைப் பார்த்த்விட்டு நாலு பேரிடம் சொன்னாலே போதும்(படம் சரி இல்ல மாப்ல நெட்ல படிச்சேன்) அந்த நாலு நாற்பதாகி,நாற்பது நானூறாகி இறுதியில் ஆர்வம் குறைந்து cd யில் பார்த்துக்கொள்ளலாம் என முடங்கி விடுவார்களே?

சினிமா இழப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல எங்கோ ஓர் திரை அரங்கில் சுண்டல் விற்கும் ஓர் சிறு வியாபாரிக்கும் அது பாதிப்புதான்..
விமர்சனங்களை நான் குறைசொல்லவில்லை..தேவையற்ற குறைகளை நான் விமர்சிக்கிறேன் அவ்வளவே..

உங்கள் விமர்சனங்கள் கலாச்சாரத்தைப் பாழாக்கும் சினிமாக்களுக்கு வாளாகட்டும்...கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சினிமாக்களுக்கு வேலியாகட்டும்....

உண்மையான கலைஞனை அடையாளம் காணுங்கள் , போலியான கலைஞனை அடிஆழம் போடுங்கள்....


Wednesday, April 16, 2008

THE HINDU விமர்சனம்

நான் சென்னையில் பல சபாக்களில் நடித்துவரும் சுஜாதாவின் " நரேந்திரனின் விநோதவழக்கு" மேடை நாடகம் குறித்த விமர்சனம் .....


Friday, March 21, 2008

இப்படிக்கு நாளைய வாசகன்...



சமீபத்திய பெரும் இழப்பு நம் சுஜாதா அவர்கள்...

அவர்களது இரங்கல் கூட்டம் சென்னை 'நாரதகான சபாவில்' நடை பெற்றது,பிரபல எழுத்தாளர்கள்,திரையுலக பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...அவரது "நரேந்திரனின் வினோத வழக்கு"மேடை நாடகத்தை தற்பொழுது சென்னையில் திரு பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் மாணவர் திருMB மூர்த்திஅவ்ர்களால் "குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் '95 " எனும் அமைப்பு நடத்தி வருகிறது...அந்நாடகத்தில் வசந்த் பத்திரத்தில் நான் நடித்து வருவதால் எங்கள் குழுவின் சார்பில் நானும் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டேன்...அப்பொழுது அங்கே பேசியவர்களின் ஆதங்க வெளிப்பாடுகளே இக்கவிதை...

சுஜாதாவைப் புரிந்து கொண்ட எதிர்கால தலைமுறையை சார்ந்த நாளைய வாசகன் ஒருவன் எழுதுவது போல் இக்கவிதயைத் தொடர்கிறேன்....



எங்கள் நினைவை ஆளும்
சுஜாதாவிற்கு!


தங்களின்
புத்தக அருள் கிடைத்த
கோடானகோடிகளில்
நானும் ஒருவன்...


எம் காலத்திற்கு
சற்று முன்னர்தான்
தாங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள்..

எம் முன்னோர்கள்
புண்ணீயம் செய்தவர்கள்
நீங்கள் வாழ்ந்த காலத்தில்
அவர்கள் வாழ்ந்தது..

நாங்கள் பாவம் செய்தவர்கள்
நாங்கள் வாழும் காலத்தில்
தாங்கள் இல்லாதது..

நான்
கேள்விப் பட்டிருக்கிறேன்...

நவீன இலக்கியம்
உன்னால்தான் ருசித்ததாம்...

நாங்கள்
அமுது சுவைப்பதற்காகவே
நீ விஷம் குடித்தாயாம்...

சதா சர்வமும்கருக்களைச்
சுமந்தே திரிவாயாம்..

அமீபா தொடங்கி
அகிலமும் விரித்த
ஆச்சரியம் நீதானாம்..

அமிலத் தன்மையாய்
அடர்ந்திருந்த
அறிவியல் தமிழை
அமுதத் தன்மைக்கு மாற்றியவனும்
நீதானாம்...

ஒரு துளி மையில்
உலகையே அளப்பாயாம்...

எழுத்துக்களுக்கே மோட்சம்
உன்
எழுதுகோல் நுனியாம்..

வேதியல் மாற்றம் சொல்லி
வியக்கவும் வைப்பாயாம்
'வேறு'இயல் மாற்றம் சொல்லி
வீரியமும் வளர்ப்பாயாம்....

sense of humour
sex of humour
உனக்கு நிகர் நீயேதானாம்..

இருப்பினும்
நானேதான் கேள்விப்பட்டேன்...
உன் காலத்தில்
சுப்பர்ஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்
அல்டிமேட் ஸ்டார்
என எல்லா ஸ்டார்களும்
அரிதாரம் பூசிக்கொள்ளும்
சினிமாக் காரர்களுக்கு
மட்டுமேஉரியதாம்...

அன்றைய ஒட்டு மொத்த
தமிழினமும்
ஓர் ஓற்றை முடியில்
கிறங்கிக் கிடந்ததாம்...

அந்த விக் அவிழும்
அழகியல் பார்க்க
தன் பொழுதுகளை
விரையப் படுத்தியதாம்...

அவர்கட்கு கிடைத்த
அந்த்ஸ்த்து,பணம்,புகழ்
கட்அவுட்,பாலாபிஷேகம் உட்பட
எதுவுமே
தங்களுக்கு இல்லையாம்..

அவர்களின்
commitement இருந்தால் போதுமாம்
கழிசடைக் கருக்கள் கூட
கரன்சிகள் குவிக்குமாம்...

ஆனால்
உனது எந்த புத்தகமும்
இது வரை ரிலீசான
ஒரே நாளில்
குறைந்த பட்சம்
ஒரு லட்சம் பிரதி கூட
விற்றதில்லையாம்...

உங்கள் தலைமுறையில்
தலைவன்,
வழிகாட்டி,முதல்வன்
எல்லாமே அவர்கள்தானம்....

அவர்களின்
விரல் அசைவிற்காகவே
தவித்துக் கிடந்ததாம்
தமிழினம்..

ஓர் புத்தக சாலையைத் திறந்தால்
பல சிறைச் சாலைகள்
மூடப்படுமாம்
கேள்விப்பட்டிருக்கிறேன்...

அனால்
உன் காலத்திலோ
அதிகம் திறக்கப்பட்டது
திரை அரங்கம்தானாம்...

அதுவும்
பல திரை அழகியரின்
பொற்கரம்பட்டே
பல பெரு நிறுவனத்தின்
வாசல் திறந்ததாம்....

அப்படி
என்ன செய்துவிட்டார்கள்
அவர்கள்?

நாங்கள்
புசிப்பதற்காகவேநீ
பசித்துக் கிடந்தாய்

நாங்கள் தழைக்கநீ
தூக்கம் தொலைத்தாய்..

ஆனால் அவர்கள்???????????

விருதுகள் கூட உன்னை
விட்டுவிலகியே சென்றதுவாம்...
ஆனால்
எம் காலம் அப்படி அல்ல...

இது
புது யுகம்
புத்தக யுகம்..

புத்தக சாலைகளேஎங்கள்
புனித ஆலையங்கள்...

எங்கள் வீடுகளில்
பூஜை அறையை விடவும்
முக்கியமானது
புத்தக அறைகளே..

நாங்கள்ஊர்கூடித்
தேர் இழுப்பதை விடவும்
அதிகம் விரும்புவது
ஊர்கூடி புத்தகம் படிப்பதையே...

எங்களின் மிகப்பெரியத் திருவிழா
புத்தகக்கண்காட்சி...

ஆம்!
எம்காலத்திலும் ரசிகன் உண்டு
ஆயினும்....

நாங்கள் வாசகர்களாகவே
ஜனிக்கும் படி
ஜெனிட்டிக்ஸ் மாற்றப்பட்ட்வர்கள்...

இதொ!
உன்
புதிய புத்தகத்திற்காய்
காத்துக் கிடக்கிறது
எம் தலைமுறை

அறிவிப்பை வெளியிடு
அடுத்த நொடியே
நாங்கள்
அனைவரும் ஆஜர்...

எங்களைப்
புத்தகப் புழுக்களாய்ப்
பிரசவித்தவனே.........

உன் தூண்டிலில்
கொழுவிக்கொள்ளவே
ஆசைப்படும் புழுக்கள் நாங்கள்...

உன்
எழுத்துக்களே
எமக்கு சூரிய நமஸ்காரம்...

விரும்பத் தவிர்க்கும்
பாடப்புத்தகமல்ல
விரும்பித் தவிக்கும்
ஞானப் புத்தகம் நீ....

எழுத்தறிவித்தோனே!
மறுபிறவி என
ஒன்று உண்டெனில்
ஒரு வேண்டுகோள்...
ரோபோக்களின் மொழிகளை
எங்கள் வகுப்பறைகள்
ஏற்றுக் கொள்வதாய் இல்லை..

ஆதலால் வா
வந்து மொழிப்பெயர்த்து விட்டுப் போ
ஏனெனில்

உன்னால் மட்டுமே சாத்தியம்
அதை மொழிப்பெயர்க்கும்
சாமர்த்தியம்....

இப்படிக்கு
நாளைய வாசகன்
சு.பி ஒன்றாம் நூற்றாண்டு...
(சு.பி சுஜாதாவிற்கு பின்)


நரேந்திரனின் வினோத வழக்கு நாடகத்தில் வசந்தாக நான்,(வசந்த் பொண்ணுக பக்கம்தாங்க நிற்பான்)


Sunday, March 9, 2008

அவள்காலைப் பொழுது










அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...
அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது..
அப்படியானால்
உலகை ஓர்முறை சுற்று
ஒட்டு மொத்தமும்
உன்னால் வசந்தமாகட்டும்.!
அதோ!
பசுந்தளிர்களின் நுனியில்
காத்துக் கிடக்கிறது
நேற்றைய மழையின்
மிச்சத்துளிகள்
உடனே வெளியில் வா
உன் மீது விழுந்து
பிறவிப்பயன் எய்தட்டும்....

கதிரவன் வந்து
கற்புடைக்கும் முன்
சாப விமோச்சனம்
கிடைத்து விடாதா என
புற்களின் நுனியில்
புலம்பிக் கிடக்கிறது
பனித்துளிகள்..

வா வந்து பதித்துவிட்டுப் போ
உன்
பாதகமலங்களை....


தயவு செய்து
துயில் எழு!
இல்லையேல்
இருள் இன்னும்
நீளக் கூடும்..

ஆம்!
உன் முகத்தில்
முழிப்பதற்காகவே
தன் முகத்தை
மூடி நிற்கிறான் சூரியன்...

எவ்வளவு நேரம்தான்
மலராமல் இருப்பது?
வா ! வந்து
வாசம்(ல்) திறந்து விடு
பாவம் அரும்புகள்...

கொடுத்து வைத்தவளடி நீ
வார்த்தைகள் கூட
உனக்காய் தோன்றியதுபோல்
வந்து குவிகிறதே!

முதலில் உனக்கு
திருஷ்டி சுற்றி போடவேண்டும்
திருஷ்டியோடு சேர்ந்து
சகலமும்
உன்னை சுற்றுகிறதே!

யார் சொன்னது?
ஒளீச்சேர்க்கை என்பது
தாவரத்திற்கு மட்டும்தான் என்று..

அவள் தாவணீ செல்லும்
திசை நோக்குங்கள்
உங்கள்
உயிர் செல்களும்
ஒளியை ஒட்டிக்கொள்ளும்..





Saturday, March 8, 2008






சொல்லியிருக்க வேண்டும்
அவனிடம்!

சக தோழனாய்
என் சரித்திரம் புரிந்தவன்
சதா சர்வமும்
புகைத்தே கழித்தவன்..

சொல்லியிருக்கலாம்தான்...

மூச்சுக்குள் புகை நிரப்பி
தேனீர் தொட்டுக் கொள்ளும்
தெருக் கடைப் பொழுதுகளிலேனும்..

அலுவலக நேரத்து
மிச்சங்களில் எல்லாம்
ஆளாய் பறக்கும்
"ஒரு தம்" நொடிகளிலேனும்...

சின்னதாய் ஒரு உலகம்
சிந்தனை ஊக்கி
எனும்
சிகெரெட் புராண
தருணங்களிலேனும்..

அக்கா பிள்ளை
ஐம்பது பைசா கேட்கும் போதும்
பிச்சைக் கிழவன்
பொக்கை வாய் இளிக்கும் போதூம்
மறுக்கும் அவனது கரங்கள்
கரன்சியை
காகித சாம்பலாக்க
அனுமதிக்கும் நொடிகளிலேனும்...

சொல்லியிருக்கலாம்தான்...

என்ன செய்வது?
கூடி இருக்கையில்
குறைகள் மறைப்பதும்
பிரிவைக் குறை தரின்
குமுறித்துடிப்பதும்
பாழும் மனிதனின்
பழக்கமாயிற்றே!

இருப்பினும்
சொல்லத் தோணிற்று

அவன் குழந்தை
அம்மா என்று
முதல் வார்த்தை முகிழ்க்கையில்
ஆனந்தப்படாத
அவன் மனைவி
அப்பாவை விளித்தால்
என் செய்வேன் என
கதறி அழுத கணத்த நொடிகளில்...

ஆதலால் தோழா....

வேண்டாம் உனக்குப் புகை
அது
எமனின் இன்னொரு வகை..

சுவாசம் என்பது மூச்சு
அதில்
சுத்தம் இல்லையேல் போச்சு...

உன்
விரல் இடுக்கிலேயே
நசுக்கப் படுகிறது
உனக்கான சந்ததி...

உன்னாலேயே
வைக்கப்படுகிறது
உன் ஆண்மைக்கான ஆப்பு...

உன் நரம்புகள் நாசம்
ஜீன்களில் விஷம்
சுவாசம் முழுதும் சாக்கடை....

புகையோடு சேர்த்து எரிகிறது
உன் பொருளாதாரத்தின்
ஒரு பகுதி.....

மறந்துவிடடதே
பிராண வாயுவின்
பிரதாண இடத்தில்
ஆயுளை நீட்டிக்கும்
அறைகளின் உட்சுவற்றில்
தயாராகிறது
உனக்கான ஒரு பாடை...

புகை தேங்கும் காற்றறை
உன் சிதை மூடும்
கல்லறை..

பாவம் உன் இரத்தம்
ஆக்சிஜன் அற்று
நிக்கோட்டின் பிடிக்குள்....

சொல்லிமுடித்துவிட்டேன்..

அவனுக்கு புரிய
வாய்ப்பில்லை
இருப்பினும்
அவன் கல்லறைக்கு அருகில்
அவசர இடம் தேடும்
இன்னொரு
நிக்கோடின் மனிதனுக்கு??!!


அதோ!
உச்சந்த் தலையில்
வெயிலை உடுத்தி
உடற்சுவற்றில்
உப்பை வடித்து
உழுது உழுது தேய்கிறானே
ஓர் பாமரன்
அவர் என் அப்பாதான்...

ஓர் அந்திக்கு முந்திய
அவசரப் பொழுதில்
அப்பா பசியை பொறுக்காத அம்மா
அரிசிச் சோற்றைக்
கொடுத்தனுப்பினாள்
காய்ந்தவயிற்றோடு
கழனியில் நிற்பவருக்கு..

வறப்பு சகதியில்
வதைக்கும் வெயிலில்
கையில் சோற்றோடு நான்..

பூரிப்பார் என்று
புன்னகை செய்கிறேன்.

வறண்ட குரலில்
தோள் பதிந்து சொன்னார்
"எங் கஷ்டம்
என்னோட போகட்டும்
எதுக்குப்பா இந்த
வெயில்ல வந்த"!

அதோ
புல்லறுக்கப் போகயிலும்
பிள்ளையையே நினைத்து
புல்லோடு சேர்த்து
விரலறு பட்டு
சிவப்பாய் வழிகிறதே
தாய்ப் பாலின் ஒரு பகுதி
அக் குருதியின் சொக்காரி
என் அம்மாதான்..

பள்ளிச் சட்டைப்
பழசாய்ப் போனதால்
புதிய சீருடை
வேண்டும் என்கிறேன்..

பள்ளிக்குச் சென்று
வீடு திரும்பையில்
பூத்துக்கிடந்தன
புதிய சட்டைகள்

உடனே அணிந்து
உவகை மிகுந்து
நன்றி சொல்ல
நானும் நிமிர்கிறேன்...
அவள்
காதணி அவிழ்த்ததை
மறைத்தபடியே தொடர்கிறாள்
"நீ ராச மாதிரி
இருக்கடா.."

அதோ
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வைஎன
எதுவுமே இல்லாது
குனிந்து குனிந்து
கூன் விழுந்து
பீடி சுற்றி மாய்கிறாளே
ஓர் சகோதரி
அவள் என் தங்கைதான்..

தன் குருதியைப்
பலமுறை
என் எழுதுகோலுக்கு மையாக்கிய
அவள்தான் சொல்கிறாள்

"நீ ந்ல்லா வருவேனு
நம்பிக்கை இருக்கு
எங்களப் பத்தின
கவலைய விடு
படி! படி! படி!...

இப்படி
பொத்தி பொத்தி
பாத்து பாத்து
பாசத்தோடப் பின்னப்பட்டவந்தான்
நான்...

ஆனாலும்
அவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை...

உச்சி வெயில்ல
நான் வேர்க்க வேர்க்க
அலையுறதும்...

கெடச்சத சாப்ட்டு
கிழிஞ்சி போயி
கெடக்குறதும்...

வருத்தப்பட்டு
பாரம் சுமக்குறதும்....

ஆனாலும்
அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை...

தயவு செய்து
சொல்லிவிடாதீர்க்ள்...

ஏனெனில்
வருத்தப்பட அவர்களுக்கு
நேரமிருக்காது
செத்துப்போகக்கூடும்.




Saturday, January 5, 2008

முதிர்கன்னி


விரும்பிய படியே
மணாளன் அமைய
விரும்பும் பாவையர்
ஒன்று கூடி
இருக்கும் நோன்பே
பாவையர் நோன்பென்றும்

கடவுளை விரும்பிய
ஆண்டாள் கூட
கண்ணனை அடைந்தாள்
என்பதுதான்
இந்த நோன்பின் சிறப்பென்றும்

மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!

அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?


Wednesday, January 2, 2008

அன்பில்லா இறைவனுக்கு...




அன்பில்லா இறைவனுக்கு
ஒரு வேளை
நீ இருந்துவிட்டால்
எனும் சந்தேகத்தோடு
தொடர்கிறேன்...

பாவம்,புண்ணியம்
இன்பம்,துன்பம்
நன்மை,தீமை
இவையெலாம்
உன் பார்வைக்கு
உட்பட்டவையே




நீதான் உயிர்களை
படைப்பதாய்
புராணமும் தன்
புழுகலை
காலத்தின் மீது
தடவிக்கொண்டே வருகிறது

பின் ஏன்
நல்லவன்,கெட்டவன்
உயர்ந்தவன்,தாழ்ந்தவன்
ஏழை,பணக்காரன்
நோயாளி,சுகவாசி
என்ற
துருவ வித்தியாசங்கள்?


படைக்கும் போதே
நல்ல ஜீன்களை
விதைத்து
கெட்ட ஜீன்களை
விடுக்கும்
வித்தை தெரியவில்லையா
உனக்கு?
எத்தனையோ யுகங்கள்
கழிந்த பின்னுமா
உன்
விஞ்ஞான அறிவில்
விருத்தியில்லை?


உன் பெயர்
சொல்லித்தானே
நீ படைத்த உயிரை
நீ படைத்த உயிரே
கொன்று குவிக்கிறது
இதுதான் உன்
படைப்பிலக்கணமா?


நீ மட்டும்
நினைத்த போதெல்லாம்
அவதாரம் எடுத்து
அற்புதம் நிகழ்த்தி
அசத்தல் நாயகனாய்
அச்சேறிவிட்டாய்..


காதல்,காமம்
கேலி,கிண்டல்
என
சுவாரஸ்ய வாழ்வை
தொடர்கதையாக்கினாய்

ஆனால்
உன்
தொண்டர்கள் மட்டும்
நிறைந்த ஏக்கங்களோடு
கிழிந்த கோவணங்களாய்


நடிகனுக்கும் உனக்கும்
என்ன வித்தியாசம்?


நடிகனின்
அவதாரத்தை
ரசிகன் ரசிக்கிறான்
தன் மானம் கிழிந்ததை
மற்றையோர்
ரசிப்பதுகூட தெரியாமல்


உன் தொண்டர்களும்
அப்படியே...

இருப்பினும்
நடிகன் என்பன்கூட
நிஜமாகிறான்
கண்கூடாய் சில
நல்லவை செய்வதால்


ஆனால் நீயோ
இல்லாதவன் என்று
தெரிந்தபோதும்
இருப்ப்தாய்த்தானே
இலக்கியம் விரிகிறது


ராமராகவும்
யேசுவாகவும்
நபிகளாகவும்
புத்தராகவும்
என் அவதாரங்கள்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கும் எனும்
உனது
கட்டுக் கதைகளை
இனி நம்பத்
தயாராக இல்லை



இது கலியுகம் அல்ல
பலியுகம்
உணர்வுகள் பிதுங்கிய
வலி யுகம்

உன்னை நினைக்கும்
அந்தக்
கணங்களில்கூட
எங்கள்
கால்களின் கீழே
குண்டுகள் வெடிக்கக் கூடும்


ஆதலால்
எங்கள்
கவனம் முழுதும்
எச்சரிக்கை நோக்கியே


ஆலயங்கள் தோறும்
அபாயங்கள்
இருப்பதாய்த்தான்
எங்கள் குழைந்தைகள்
கற்றுக்கொள்கிறார்கள்


மத அடயாளங்கள்
மரணத்தின்
வாசற் கதவுகள்
என்பதைப்
புரிந்துகொண்டுவிட்டோம்


ஆதலால்
ஒன்று செய்..
நல்லதோர்
உலகைக் கொடு
இல்லையேல்
உன் ராஜினாமாவை
நீயே பகிரங்கப்படுத்து..


ஒட்டுமொத்த உயிர்களும்
உன் மீது
நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
கொண்டுவரும் நாள்
வெகு தொலைவில் இல்லை...