தேடலும் தேடல் நிமித்தமும்..

Sunday, August 23, 2009

போதி

அவனது கடைசி இரவு அது, அதோ காத்திருக்கிறதே ஒரு விஷ பாட்டில் அது அவனுக்காகத்தான்...

இன்னும் சிறிது நேரத்தில் அவன் மரிக்கக் கூடும்,அது நடந்தே தீரும்...
பாவம் நீந்தியே பழக்கம் இல்லாதவனுக்கு ,எதிர் நீச்சல் எப்படி சாத்தியமாகும்? காணும் இடமெல்லாம் இருளே சூழ்ந்து கிடப்பதாலும்,அப்படித்தான் அவன் நம்புவதாலும் வெளிச்சம் விரிக்க வேண்டிய வயதில் விதியை சுருக்க முற்படுகிறான்.

இன்னும் சிறிது நேரத்தில் மரணத்தை நிகழ்த்தியே தீருவேன் என்றபடி இருக்கிறது விஷப் பாட்டில் மீது விரவியிருக்கும் அவ்னது பார்வை...
இருப்பினும் தன் மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் கவனமாய் செலவழிக்கிறான்,

அதோ ஒரு நொடி திடீரென மழைத்துளிகளைப் பிரசவித்து அவனது மரணத்தை பல நொடிகள் ஒத்திவைக்க செய்கிறது,.எத்தனையோ தடவை மழை பார்த்திருக்கிறான்..ஆனால் இன்று மட்டும் ஏனோ அவனுக்குள் அப்படியோர் தவிப்பு.,மழை வரும் பொழுதுகளை எல்லாம் அவன் விடும் கண்ணீர் பொழுதுகளாய் ஆக்கியதின் விளைவு அது.
தன் மரணுத்துக்கு முந்திய கடைசி நொடிகளில் அவந்தான் கேட்கிறான்,மழை இத்தனை அழகானதா?முதன் முதலாய் வியக்க ஆரம்பிக்கிறான்...பாவம்! ரசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தெரிந்திருந்தால் அவன் ஏன் விஷப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும்?ஒட்டுமொத்த உலகத்தையும் இன்றுதான் உற்று நோக்குகிறான் அல்லது உணர்கிறான்..

நீண்டு நெடிந்திருக்கும் அந்த நகரத்து வீதியில் அவனது விழிகள் விரிகிறது, அதோ! வற்றிப்போன மார்பை சுவைத்துக்கொண்டிருக்கும் ஓர் platform தாயின் குழந்தை என்னமாய் சிரிக்கிறது?

அட! என் வயதை ஒத்தவர்கள்தான் இந்த குப்பை அள்ளுபவர்கள் கும்மியடித்துக்கொண்டே எத்தனை அழகாய் குப்பை அகற்றுகிறார்கள்?

அதோ கூர்கா தயாராகிறான் பாஷை தெரியா பாடலை முனுமுனுத்துக்கொண்டே,பாஷை தெரியாவிடினும் அவ்ன் சந்தோசம் என்னையும் அல்லவா ஏங்க வைக்கிறது?

இரவு இத்தனை ரம்மியமானதா?ஒளிர்ந்து கிடக்கும் விளக்குகளையும்,தெளிந்து கிடக்கும் வானத்தையும் நோக்குகிறான்,வெளிச்சம் இருக்கத்தானே செய்கிறது என்பது போல் மனதைக் கேட்கிறான்...

விஷப்பாட்டில் ஏமாற்றிவிடுவானோ என்னுமொரு கோணத்தில் அவனை பயமுறுத்துகிறது அல்லது மீண்டும் அவனது மரண நொடிகளை ஞாபகப் படுத்திற்று...

தன் தாயை நினைத்துப் பார்க்கிறான்..அம்மா...அம்மா...அம்மா....உன் தாலியை விடுத்து எனக்கு கல்வியைக் கொடுத்தாய்,உன் காய்ந்த வயிறுக்கு நான் ஏதம்மா கொடுத்தேன்?
நான் என்ன செய்வேன்?என்னால் முடியாது போயிற்றே நான் இருந்தும் என்ன பயன்?
இதோ!உன் மகன் இறக்கப் போகிறேன் ஒட்டு மொத்தமாய் ஒரு நிம்மதிக்காக இறக்கப் போகிறேன்.
நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறுகிறான்...அவனது இயலாமை மீண்டும் இயங்கத்தொடங்கிற்று...ஆவேசம் வந்தவனாய் விஷப்பாட்டில் எடுக்கிறான்,கண்ணைமூடி ஒரே மடக்கில் குடித்துவிட ஆயத்தமாகிறான்.....கண்களை மூடுகிறான் ,முடியவில்லை கை நடுங்கிற்று,அம்மாவின் முகம் வந்து வந்து போகிறது..... அம்மா..அம்மா....அம்மா...அழத்தொடங்குகிறான்...அம்மாவின் குரலையாவது கேட்டுவிடமாட்டோமா என அவசியப்படுகிறான்.......சில நொடிகள் தள்ளிப் போகிறது...

விஷப்பாட்டில் மட்டும் Waiting.....

அம்மாவைப் பற்றிய தாகம் அதிகரிக்க,அதிகரிக்க.....அவசர அவசரமாக ஓர் தொலைபேசி நிலையத்தை அடைகிறான்....எண்களை சுழற்றுகிறான்,பக்கத்து வீட்டு அக்காவிடம் சொல்லி அம்மாவை அழைத்துவர சொல்கிறான்,சிறிது நேரத்திலேயே எய்யா ராசா எனும் ஏக்கத்தோடு எதிர்முனையில் அம்மாவின் குரல்...
கேட்ட மாத்திரத்திலேயே அவன் நெஞ்சு அடைக்கிறது,விழிகள் வெடிக்கிறது...
எதிர் முனையில் மட்டும் ஒரு ஏக்கத்தவிப்பு விட்டு விட்டு ஒலிக்கிறது....

பேச நா எழவில்லை...ரிசீவரை வைத்துவிட்டு விம்மியபடியே கடைகாரரை நெருங்குகிறான்...

கடை காரரும் வருந்தியபடியே ,என்ன சார்?ஏன் சார் அழுறீங்க?கவல படாதீங்க சார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...உங்க கண்ணீரை நான் உணர்கிறேன் அழாதீங்க சார் அழாதீங்க என்கிறார்...

யோ! கண்ணுனு இருந்தா அழுக வரத்தான் செய்யும்,அதுலான் உனக்கு இப்ப எதுக்கு இந்தா என 10 ரூபா நோட்டை எரிச்சலோடு நீட்டுகிறான்,
கடைகாரர் அதை நிதானமாக வாங்கி விரல்களால் விட்டமளக்கிறார்...

என்ன சார்? நல்ல நோட்டா கள்ள நோட்டானு பாக்குறீங்களா?நல்ல நோட்டுதான் என மீண்டும் எரிந்துவிழுகிறான்...

சற்று நிதானத்துடன் கடை காரர் தொடர்கிறார் ஏன் சார்? ஏன் எதுக்கெடுத்தாலும் விரக்தியில பேசுறீங்க?நீங்க கொடுக்குற இந்த காசுதான் ஏதோ ஒரு விதத்துல என் அம்மாவுக்கும்,சகோதரிக்கும் சந்தோசத்தக் கொடுக்குது எனக்கான கடமை இது சார்...

அப்புறம் என்ன சொன்னீங்க?கண்ணுனு இருந்தா அழுக வருமா?கண்ணு இல்லாட்டியும் கூட அழுக வரும் சார்,மெதுவாக தன் கண்ணாடியை கழற்றுகிறார்...அங்கே விழிகள் இல்லாது இரு குழிகள் மட்டுமே இருளை அப்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான்...
என்ன சார் பேசாம நிக்குறீங்க?.....நா பிறவிக் குருடன்....இருந்தாலும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு,என்னிக்குமே அத தவிக்க விட்டதில்ல..உங்களுக்கு என்ன சோகமோ எனக்குத் தெரியாது,ஆனா சோகம் என்பது நிரந்தரமல்ல அத மட்டும் புரிஞ்சுக்கோங்க...விழி என்பது எனக்கான குறை பாடு மட்டுமே அத என்னிக்குமே சோகமாகவோ,சுமையாகவோ நா நினைச்சதில்ல......இந்தாங்க மீதி சில்லறை என தெளிவாய் எண்ணிக் கொடுக்கிறார்....நா ஏதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சி....அதற்குள் அவர் கரங்களைப் பற்றி நீங்கதான் சார் என்ன மன்னிக்கனும்,..இவ்வளவு நாளும் கண் இருந்தும் இருட்ட மட்டுந்தான் பழக்கப்படுத்தி வந்திருக்கேன்...ஆனா நீங்களோ வெளிச்சம்கிறது புறம் மட்டுமல்ல அகத்தையும் சார்ந்ததுனு புரிய வச்சிட்டீங்க....எனக்குள்ளும் இப்போ வெளிச்சம் கிடச்சாச்சு...என் போதியே உங்களை வணங்குகிறேன்..நிறைந்த மனதோடு வெளியில் வருகிறான்...வானத்தில் ஒரு வளர்பிறை தன் பெளர்ணமிக்கான பயணத்தை தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடக்கிறான்......தூரத்தில் எங்கோ விஷப்பாட்டில் உடையும் சப்தம் கேட்கிறது.