தேடலும் தேடல் நிமித்தமும்..

Friday, March 21, 2008

இப்படிக்கு நாளைய வாசகன்...



சமீபத்திய பெரும் இழப்பு நம் சுஜாதா அவர்கள்...

அவர்களது இரங்கல் கூட்டம் சென்னை 'நாரதகான சபாவில்' நடை பெற்றது,பிரபல எழுத்தாளர்கள்,திரையுலக பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...அவரது "நரேந்திரனின் வினோத வழக்கு"மேடை நாடகத்தை தற்பொழுது சென்னையில் திரு பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் மாணவர் திருMB மூர்த்திஅவ்ர்களால் "குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் '95 " எனும் அமைப்பு நடத்தி வருகிறது...அந்நாடகத்தில் வசந்த் பத்திரத்தில் நான் நடித்து வருவதால் எங்கள் குழுவின் சார்பில் நானும் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டேன்...அப்பொழுது அங்கே பேசியவர்களின் ஆதங்க வெளிப்பாடுகளே இக்கவிதை...

சுஜாதாவைப் புரிந்து கொண்ட எதிர்கால தலைமுறையை சார்ந்த நாளைய வாசகன் ஒருவன் எழுதுவது போல் இக்கவிதயைத் தொடர்கிறேன்....



எங்கள் நினைவை ஆளும்
சுஜாதாவிற்கு!


தங்களின்
புத்தக அருள் கிடைத்த
கோடானகோடிகளில்
நானும் ஒருவன்...


எம் காலத்திற்கு
சற்று முன்னர்தான்
தாங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள்..

எம் முன்னோர்கள்
புண்ணீயம் செய்தவர்கள்
நீங்கள் வாழ்ந்த காலத்தில்
அவர்கள் வாழ்ந்தது..

நாங்கள் பாவம் செய்தவர்கள்
நாங்கள் வாழும் காலத்தில்
தாங்கள் இல்லாதது..

நான்
கேள்விப் பட்டிருக்கிறேன்...

நவீன இலக்கியம்
உன்னால்தான் ருசித்ததாம்...

நாங்கள்
அமுது சுவைப்பதற்காகவே
நீ விஷம் குடித்தாயாம்...

சதா சர்வமும்கருக்களைச்
சுமந்தே திரிவாயாம்..

அமீபா தொடங்கி
அகிலமும் விரித்த
ஆச்சரியம் நீதானாம்..

அமிலத் தன்மையாய்
அடர்ந்திருந்த
அறிவியல் தமிழை
அமுதத் தன்மைக்கு மாற்றியவனும்
நீதானாம்...

ஒரு துளி மையில்
உலகையே அளப்பாயாம்...

எழுத்துக்களுக்கே மோட்சம்
உன்
எழுதுகோல் நுனியாம்..

வேதியல் மாற்றம் சொல்லி
வியக்கவும் வைப்பாயாம்
'வேறு'இயல் மாற்றம் சொல்லி
வீரியமும் வளர்ப்பாயாம்....

sense of humour
sex of humour
உனக்கு நிகர் நீயேதானாம்..

இருப்பினும்
நானேதான் கேள்விப்பட்டேன்...
உன் காலத்தில்
சுப்பர்ஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்
அல்டிமேட் ஸ்டார்
என எல்லா ஸ்டார்களும்
அரிதாரம் பூசிக்கொள்ளும்
சினிமாக் காரர்களுக்கு
மட்டுமேஉரியதாம்...

அன்றைய ஒட்டு மொத்த
தமிழினமும்
ஓர் ஓற்றை முடியில்
கிறங்கிக் கிடந்ததாம்...

அந்த விக் அவிழும்
அழகியல் பார்க்க
தன் பொழுதுகளை
விரையப் படுத்தியதாம்...

அவர்கட்கு கிடைத்த
அந்த்ஸ்த்து,பணம்,புகழ்
கட்அவுட்,பாலாபிஷேகம் உட்பட
எதுவுமே
தங்களுக்கு இல்லையாம்..

அவர்களின்
commitement இருந்தால் போதுமாம்
கழிசடைக் கருக்கள் கூட
கரன்சிகள் குவிக்குமாம்...

ஆனால்
உனது எந்த புத்தகமும்
இது வரை ரிலீசான
ஒரே நாளில்
குறைந்த பட்சம்
ஒரு லட்சம் பிரதி கூட
விற்றதில்லையாம்...

உங்கள் தலைமுறையில்
தலைவன்,
வழிகாட்டி,முதல்வன்
எல்லாமே அவர்கள்தானம்....

அவர்களின்
விரல் அசைவிற்காகவே
தவித்துக் கிடந்ததாம்
தமிழினம்..

ஓர் புத்தக சாலையைத் திறந்தால்
பல சிறைச் சாலைகள்
மூடப்படுமாம்
கேள்விப்பட்டிருக்கிறேன்...

அனால்
உன் காலத்திலோ
அதிகம் திறக்கப்பட்டது
திரை அரங்கம்தானாம்...

அதுவும்
பல திரை அழகியரின்
பொற்கரம்பட்டே
பல பெரு நிறுவனத்தின்
வாசல் திறந்ததாம்....

அப்படி
என்ன செய்துவிட்டார்கள்
அவர்கள்?

நாங்கள்
புசிப்பதற்காகவேநீ
பசித்துக் கிடந்தாய்

நாங்கள் தழைக்கநீ
தூக்கம் தொலைத்தாய்..

ஆனால் அவர்கள்???????????

விருதுகள் கூட உன்னை
விட்டுவிலகியே சென்றதுவாம்...
ஆனால்
எம் காலம் அப்படி அல்ல...

இது
புது யுகம்
புத்தக யுகம்..

புத்தக சாலைகளேஎங்கள்
புனித ஆலையங்கள்...

எங்கள் வீடுகளில்
பூஜை அறையை விடவும்
முக்கியமானது
புத்தக அறைகளே..

நாங்கள்ஊர்கூடித்
தேர் இழுப்பதை விடவும்
அதிகம் விரும்புவது
ஊர்கூடி புத்தகம் படிப்பதையே...

எங்களின் மிகப்பெரியத் திருவிழா
புத்தகக்கண்காட்சி...

ஆம்!
எம்காலத்திலும் ரசிகன் உண்டு
ஆயினும்....

நாங்கள் வாசகர்களாகவே
ஜனிக்கும் படி
ஜெனிட்டிக்ஸ் மாற்றப்பட்ட்வர்கள்...

இதொ!
உன்
புதிய புத்தகத்திற்காய்
காத்துக் கிடக்கிறது
எம் தலைமுறை

அறிவிப்பை வெளியிடு
அடுத்த நொடியே
நாங்கள்
அனைவரும் ஆஜர்...

எங்களைப்
புத்தகப் புழுக்களாய்ப்
பிரசவித்தவனே.........

உன் தூண்டிலில்
கொழுவிக்கொள்ளவே
ஆசைப்படும் புழுக்கள் நாங்கள்...

உன்
எழுத்துக்களே
எமக்கு சூரிய நமஸ்காரம்...

விரும்பத் தவிர்க்கும்
பாடப்புத்தகமல்ல
விரும்பித் தவிக்கும்
ஞானப் புத்தகம் நீ....

எழுத்தறிவித்தோனே!
மறுபிறவி என
ஒன்று உண்டெனில்
ஒரு வேண்டுகோள்...
ரோபோக்களின் மொழிகளை
எங்கள் வகுப்பறைகள்
ஏற்றுக் கொள்வதாய் இல்லை..

ஆதலால் வா
வந்து மொழிப்பெயர்த்து விட்டுப் போ
ஏனெனில்

உன்னால் மட்டுமே சாத்தியம்
அதை மொழிப்பெயர்க்கும்
சாமர்த்தியம்....

இப்படிக்கு
நாளைய வாசகன்
சு.பி ஒன்றாம் நூற்றாண்டு...
(சு.பி சுஜாதாவிற்கு பின்)


நரேந்திரனின் வினோத வழக்கு நாடகத்தில் வசந்தாக நான்,(வசந்த் பொண்ணுக பக்கம்தாங்க நிற்பான்)


Sunday, March 9, 2008

அவள்காலைப் பொழுது










அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...
அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது..
அப்படியானால்
உலகை ஓர்முறை சுற்று
ஒட்டு மொத்தமும்
உன்னால் வசந்தமாகட்டும்.!
அதோ!
பசுந்தளிர்களின் நுனியில்
காத்துக் கிடக்கிறது
நேற்றைய மழையின்
மிச்சத்துளிகள்
உடனே வெளியில் வா
உன் மீது விழுந்து
பிறவிப்பயன் எய்தட்டும்....

கதிரவன் வந்து
கற்புடைக்கும் முன்
சாப விமோச்சனம்
கிடைத்து விடாதா என
புற்களின் நுனியில்
புலம்பிக் கிடக்கிறது
பனித்துளிகள்..

வா வந்து பதித்துவிட்டுப் போ
உன்
பாதகமலங்களை....


தயவு செய்து
துயில் எழு!
இல்லையேல்
இருள் இன்னும்
நீளக் கூடும்..

ஆம்!
உன் முகத்தில்
முழிப்பதற்காகவே
தன் முகத்தை
மூடி நிற்கிறான் சூரியன்...

எவ்வளவு நேரம்தான்
மலராமல் இருப்பது?
வா ! வந்து
வாசம்(ல்) திறந்து விடு
பாவம் அரும்புகள்...

கொடுத்து வைத்தவளடி நீ
வார்த்தைகள் கூட
உனக்காய் தோன்றியதுபோல்
வந்து குவிகிறதே!

முதலில் உனக்கு
திருஷ்டி சுற்றி போடவேண்டும்
திருஷ்டியோடு சேர்ந்து
சகலமும்
உன்னை சுற்றுகிறதே!

யார் சொன்னது?
ஒளீச்சேர்க்கை என்பது
தாவரத்திற்கு மட்டும்தான் என்று..

அவள் தாவணீ செல்லும்
திசை நோக்குங்கள்
உங்கள்
உயிர் செல்களும்
ஒளியை ஒட்டிக்கொள்ளும்..





Saturday, March 8, 2008






சொல்லியிருக்க வேண்டும்
அவனிடம்!

சக தோழனாய்
என் சரித்திரம் புரிந்தவன்
சதா சர்வமும்
புகைத்தே கழித்தவன்..

சொல்லியிருக்கலாம்தான்...

மூச்சுக்குள் புகை நிரப்பி
தேனீர் தொட்டுக் கொள்ளும்
தெருக் கடைப் பொழுதுகளிலேனும்..

அலுவலக நேரத்து
மிச்சங்களில் எல்லாம்
ஆளாய் பறக்கும்
"ஒரு தம்" நொடிகளிலேனும்...

சின்னதாய் ஒரு உலகம்
சிந்தனை ஊக்கி
எனும்
சிகெரெட் புராண
தருணங்களிலேனும்..

அக்கா பிள்ளை
ஐம்பது பைசா கேட்கும் போதும்
பிச்சைக் கிழவன்
பொக்கை வாய் இளிக்கும் போதூம்
மறுக்கும் அவனது கரங்கள்
கரன்சியை
காகித சாம்பலாக்க
அனுமதிக்கும் நொடிகளிலேனும்...

சொல்லியிருக்கலாம்தான்...

என்ன செய்வது?
கூடி இருக்கையில்
குறைகள் மறைப்பதும்
பிரிவைக் குறை தரின்
குமுறித்துடிப்பதும்
பாழும் மனிதனின்
பழக்கமாயிற்றே!

இருப்பினும்
சொல்லத் தோணிற்று

அவன் குழந்தை
அம்மா என்று
முதல் வார்த்தை முகிழ்க்கையில்
ஆனந்தப்படாத
அவன் மனைவி
அப்பாவை விளித்தால்
என் செய்வேன் என
கதறி அழுத கணத்த நொடிகளில்...

ஆதலால் தோழா....

வேண்டாம் உனக்குப் புகை
அது
எமனின் இன்னொரு வகை..

சுவாசம் என்பது மூச்சு
அதில்
சுத்தம் இல்லையேல் போச்சு...

உன்
விரல் இடுக்கிலேயே
நசுக்கப் படுகிறது
உனக்கான சந்ததி...

உன்னாலேயே
வைக்கப்படுகிறது
உன் ஆண்மைக்கான ஆப்பு...

உன் நரம்புகள் நாசம்
ஜீன்களில் விஷம்
சுவாசம் முழுதும் சாக்கடை....

புகையோடு சேர்த்து எரிகிறது
உன் பொருளாதாரத்தின்
ஒரு பகுதி.....

மறந்துவிடடதே
பிராண வாயுவின்
பிரதாண இடத்தில்
ஆயுளை நீட்டிக்கும்
அறைகளின் உட்சுவற்றில்
தயாராகிறது
உனக்கான ஒரு பாடை...

புகை தேங்கும் காற்றறை
உன் சிதை மூடும்
கல்லறை..

பாவம் உன் இரத்தம்
ஆக்சிஜன் அற்று
நிக்கோட்டின் பிடிக்குள்....

சொல்லிமுடித்துவிட்டேன்..

அவனுக்கு புரிய
வாய்ப்பில்லை
இருப்பினும்
அவன் கல்லறைக்கு அருகில்
அவசர இடம் தேடும்
இன்னொரு
நிக்கோடின் மனிதனுக்கு??!!


அதோ!
உச்சந்த் தலையில்
வெயிலை உடுத்தி
உடற்சுவற்றில்
உப்பை வடித்து
உழுது உழுது தேய்கிறானே
ஓர் பாமரன்
அவர் என் அப்பாதான்...

ஓர் அந்திக்கு முந்திய
அவசரப் பொழுதில்
அப்பா பசியை பொறுக்காத அம்மா
அரிசிச் சோற்றைக்
கொடுத்தனுப்பினாள்
காய்ந்தவயிற்றோடு
கழனியில் நிற்பவருக்கு..

வறப்பு சகதியில்
வதைக்கும் வெயிலில்
கையில் சோற்றோடு நான்..

பூரிப்பார் என்று
புன்னகை செய்கிறேன்.

வறண்ட குரலில்
தோள் பதிந்து சொன்னார்
"எங் கஷ்டம்
என்னோட போகட்டும்
எதுக்குப்பா இந்த
வெயில்ல வந்த"!

அதோ
புல்லறுக்கப் போகயிலும்
பிள்ளையையே நினைத்து
புல்லோடு சேர்த்து
விரலறு பட்டு
சிவப்பாய் வழிகிறதே
தாய்ப் பாலின் ஒரு பகுதி
அக் குருதியின் சொக்காரி
என் அம்மாதான்..

பள்ளிச் சட்டைப்
பழசாய்ப் போனதால்
புதிய சீருடை
வேண்டும் என்கிறேன்..

பள்ளிக்குச் சென்று
வீடு திரும்பையில்
பூத்துக்கிடந்தன
புதிய சட்டைகள்

உடனே அணிந்து
உவகை மிகுந்து
நன்றி சொல்ல
நானும் நிமிர்கிறேன்...
அவள்
காதணி அவிழ்த்ததை
மறைத்தபடியே தொடர்கிறாள்
"நீ ராச மாதிரி
இருக்கடா.."

அதோ
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வைஎன
எதுவுமே இல்லாது
குனிந்து குனிந்து
கூன் விழுந்து
பீடி சுற்றி மாய்கிறாளே
ஓர் சகோதரி
அவள் என் தங்கைதான்..

தன் குருதியைப்
பலமுறை
என் எழுதுகோலுக்கு மையாக்கிய
அவள்தான் சொல்கிறாள்

"நீ ந்ல்லா வருவேனு
நம்பிக்கை இருக்கு
எங்களப் பத்தின
கவலைய விடு
படி! படி! படி!...

இப்படி
பொத்தி பொத்தி
பாத்து பாத்து
பாசத்தோடப் பின்னப்பட்டவந்தான்
நான்...

ஆனாலும்
அவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை...

உச்சி வெயில்ல
நான் வேர்க்க வேர்க்க
அலையுறதும்...

கெடச்சத சாப்ட்டு
கிழிஞ்சி போயி
கெடக்குறதும்...

வருத்தப்பட்டு
பாரம் சுமக்குறதும்....

ஆனாலும்
அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை...

தயவு செய்து
சொல்லிவிடாதீர்க்ள்...

ஏனெனில்
வருத்தப்பட அவர்களுக்கு
நேரமிருக்காது
செத்துப்போகக்கூடும்.