தேடலும் தேடல் நிமித்தமும்..

Sunday, December 31, 2006

புதுப்பிக்கிறோம் !


இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்....
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை .........
இந்த ஜகத்தினை......................?
வேண்டாம் பாரதி வேண்டாம்....
இனி ஜகம் அழியாது காப்பதே எங்கள் பொறுப்பு...
காய்ந்த வயிறுகளுக்காய்
எங்கள் கரங்கள் சேர்ப்போம்....
சாய்ந்த மனிதன் இல்லா புதுச் சாலைகள் படைப்போம்......
ஆம் !
புதுப்பிக்கிறோம் உன் விதியை
இந்த இனிய புத்தாண்டில்.....






Saturday, December 16, 2006

இப்படிக்கு ஆயுள்கைதி!

"கடிதம்" இந்த சொல் இப்பொழுது வழக்கில் உள்ளதா என்பதே சந்தேகம்தான்..! கால மாற்றம் சிலவற்றை சுருங்கச் செய்துவிட்டது.. அப்படி சுருங்கியவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்....

கடிதம் என்பதே ஓர் இலக்கியம் என்பதை இங்கே எத்தனை பேர் அறிவோம்? அது கதை சொல்லும் , காதல் சொல்லும் , நட்பு சொல்லும்.......,

சந்தோஷம், அழுகை, கோபம், தாகம், வெட்கம் , ஏக்கம், தவிப்பு, என உணர்ச்சிகள் சொல்லி உயிரை நீட்டிக்கும்....

கடிதம் என்பதே உறவுகளைப் புதுப்பிக்கும் ஓர் களம் அல்லவா?

கனவுகள் பூப்பிக்க, கற்பனை தருவிக்க, கடந்த காலத்து மிச்சங்களை....,

காலச்சுவடுகளில் நம்மைப் பற்றிய பதிவுகளை....., நம்மை நாமே அறிந்துணரும் ஓர் பொக்கிஷம் அல்லவா..!

புல்லரிக்க செய்வதும், பூப்பூக்க செய்வதும், செல்லரிக்க செய்வதும், செத்துப்போக செய்வதும் கடிதம் அன்றி வேறேது?..

உன்னை நீ அறியவும் , மற்றவர் உன்னை அறியவும்,..அறிதலும் அறிதல் நிமித்தம் பணித்தலும் கடிதம்தானே!

கடிதம் நம் இறந்த காலத்து உயிர்ப் பிம்ம்பங்களை நிகழ்காலத்தில் காணச்செய்யும் அதிசயக் கண்ணாடி !

இப்பேர்பட்டக் கடிதத்தை நம்முள் எத்தனை பேர் இன்று எழுதுகிறோம் ???? நாம்தான் நினைத்த உடனேயே தொலைவில் இருப்பவரை தொடர்பு எல்லைக்கு உட்பட்டவராக்கி தொலைபேசியில் தொடர்கிறோமே! பிறகு எங்கே கடிதம் எழுதுவது...?
சரி!சரி! விஷயத்திற்கு வருகிறேன்..எத்தனையோ கடிதங்கள் நம்மைப் பாதித்ததுண்டு, பாதிப்பதுண்டு..
அப்படி சமீபத்தில் என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது ஓர் கடிதம்....
from வேலுர் மத்திய சிறை என்ற சுயத்தோடு நம்பிக்கை என்ற விலாசத்திற்கு மன்னிக்கவும் ஜனா என்ற சிறுவனுக்கு வந்திருந்தது அக்கடிதம்...
அன்புள்ள ஜனாவுக்கு எனத் தொடங்கும் அக்கடிதம் பல உணர்ச்சிக் கவிதைகளை உள்ளடக்கி இப்படிக்கு ஆயுள் கைதி என முடிந்திருந்தது...
யார் இந்த ஜனா ?


6 வருடங்களுக்கு முன்பு வரை எல்லோரையும் போல் துள்ளிக்குதித்தவன் தான் இந்த ஜனா எனும் சாதா சிறுவன் ஆனால் இன்றோ இரு கைகள் ஒரு கால் என முக்கிய அவயம் முழுதும் இழந்து முடமாய் அல்லாது முயற்சியால் உயர்ந்து நிற்கும் சாதனைச்சிறுவன்..

அச்சிறுவனுக்குத்தான் ஆயுள் கைதியின் மடல்......
ஆம் ஓர் மின்சார விபத்தில் முடமானான்...ஆனால் அவனோ கைகள் இல்லா விடில் என்ன முடங்காது தன் வாயால் எழுத்துக்களை, வண்ணங்களை,எழுத ஆரம்பித்தான்..
இன்றோ இருமுறை ஜனாதிபதி விருதும்...பல ஓவியப்போட்டிகளுக்கு நடுவராகவும் உயர்ந்து நிற்கிறான்.
இவன் சாதனை எல்லாப் பத்திரிக்கைகளிலும் பதிவாகியுள்ளது..அப்படியோர் பதிவுதான் இந்த ஆயுள் கைதியைப் பாதித்துள்ளது...அதன் விளைவுதான் இம்மடல்..
அதிலும் குறிப்பாக ஆயுள் கைதியின் ஓவியம்,உயர்தர வரிகள்...என்னை மிகவும் பாதித்தது...
"என் இரு கைகளையும் உனக்குத் தருகிறேன் பதிலுக்கு உன் நம்பிக்கையை எனக்குத் தா என அந்த கைதி வேண்டுவது உணர்ச்சியின் உச்சம்!....(ஒரு குறும்பட தகவலுக்காக அந்த சாதனை சிறுவனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது...அப்போதுதான் அக்கடிதம் பார்த்தேன்)
ஜனாவைப் பற்றிய நிஜங்கள் அறிய இங்கே சுட்டவும் www.azhagi.com/jana ....


Sunday, December 10, 2006

அத்தமக ஒனக்காக...

சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு ஒன்றைப் படித்தேன்,
வாய் மொழி இலக்கியம் இன்று எழுத்துருவில் வந்ததில் மகிழ்ச்சி...
சரி நம்மாளுக்கு நாமளும் ஒரு நாட்டுப்புறப் பா எழுதலாமேனு யோசிச்சேன் ...
இதோ இந்த பழய பட்டிக்காட்டானின் புதிய வரிகள்....

சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சி
சித்திரமா சேல கட்டி
வட்டநிலா பொட்டு வச்சி
வடிவழகா போறவளே-உன்

எண்ணத்தில நா இருந்தும்
என்ன விட்டுப் போறியடி
இன்னுமொரு மொறமாமன்
இனி ஒனக்கு இல்லையடி..

அத்த மக ஒனக்காக
அமெரிக்கா போவனும்னு
வெட்டி வெத வெதச்சேன்
வெதச்ச நெல்லும் அறுத்து வச்சேன்...

சிமிளி வெளிச்சத்தில
சீண்டி விடும் இடையழக
கரண்டு வெளிச்சத்தில
கண்டு வர நா நெனச்சேன்

ஓலக்குடிசையில
ஒத்தயில இருப்பேனு
ஒசத்தியா ஓட்டு வீடு
ஒனக்காக கட்டி வச்சேன்

ஆட்டு விரலாட்டி
ஆயுசு குறயுமுன்னு
கரண்டு கிரைண்டரொன்னு
கடையில நா பாத்து வச்சேன்

அம்மிக்கல்லு நச்சி
அந்நிக்கு நீ அழுதையின்னு
அழகான மிக்சி ஒன்னு
அடுத்த நாளே வாங்கி வச்சேன்

தேக்கு மரக் கட்டிலிலே
தேவியம்மா நீ படுக்க
வாக்கு சொல்லி வந்து விட்டேன்
வடிவழகா செஞ்சு வெக்க

உச்சி வெயில் நேரத்தில
உள்ளங்கை வேக்குமுன்னு
கச்சிதமா காத்தாடி
கடயில நா வாங்கி வச்சேன்

ஒடக்கருவ வெறவு வச்சி
ஒக்காந்து பொக மூட்டி
ஒருவெறவும் எரியலேனு
ஒப்பாரி வச்சயீன்னு

காரு ஏறி கடைக்குப் போயி
காஸ் அடுப்பு வாங்கி வந்து
காட்டனும்னு ஓடி வந்தா
கண்டுக்காம போறியடி...


Friday, December 1, 2006

கற்பவை கற்றபின்...(சிறுகதை)

பாவம் இந்த பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும்?..அதற்காக இப்படியா?..
கண்ணீர்த் துளிகளை உதிர்த்துக் கொண்டே விரிந்திருக்கும் கோரம்பாயில் விரிந்து கிடக்கும் தன் அஞ்சு வயது பிஞ்சு மகனுக்கு உப்பிய காயங்களில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தான் ஏழுமலை.

அப்படி அவன் என்னதான் செய்துவிட்டான்?..
இப்படி துவைத்து எடுத்து விட்டார்களே.. நினைக்கும் போதே நெஞ்ச குமுறினான் ஏழுமலை...

சாய்ங்காலம் தேர் வீதியில் நடந்த சம்பவத்தால் ரெம்பவும் நொறுங்கிப் போயிருந்தான் ஏழுமலை, அதுவும் இந்த சிறு வயதில் அந்த சிறுவன் கேட்ட கேள்விகள் இன்னும் அவனை ரணப் படுத்தியது..

"அப்பா..ஏம்பா நாம மட்டும் சாமி கும்பிட கூடாதா?..
எல்லாப் பசங்களூம் கோயிலுக்குள்ள போயி சாமிய பாக்காங்க நம்மள மட்டும் ஏம்பா உடமாட்டுக்காங்க ?
நா இழுத்தா மட்டும் தேர் நகராதா?
அவங்கெல்லாம் வடத்த தொடுதாங்க நா போயி தொட்டா மட்டும் ஏம்பா என்ன இப்படி அடிச்சிட்டாங்க?
நீங்கதாம்பா சொன்னீங்க கடவுள்தான் இந்த உலகத்தயே காக்கிறவர்னு..
அந்தக் கடவுள நாம மட்டும் ஏம்பா பாக்ககூடாது?...
உடல் காயமும் உள்ளக்காயமும் அவனை பெரிதும் பாதித்ததால் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்..

என்னதான் செய்வான் ஏழுமலை...
எப்படி அச்சிறுவனுக்குப் புரிய வைப்பது?
நாமெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள்,
நாம எப்பவுமே அவங்களுக்கு கீழதானு சொன்னா இவனுக்கு புரியுமா?
நாம தேர் வடத்த தொட்டா நகராதானு கேக்குறானே
நாம தேர் வீதி போனதே தீட்டு அல்லவா?
ஏதோ தேர் திருவிழாவ பாக்க ஆசபட்டானேனு தெரியாம கூட்டுப்போய்ட்டேன் ஆனா இப்படி ஆயிடுச்சே..
கண்ணீர் வற்றிய கண்களோடு தன் மகனை அணைத்து கண் அயர்ந்தான் ஏழுமலை.

ஆனால் அந்த பிஞ்சு உள்ளத்துக்கோ இரவு முழுதும் தேர் வீதியைப் ப்ற்றிய நினைப்புதான்...
தன் வயசுப் பசங்க ஓடி விளயாட்றது,
மேள சத்தம், பந்தல் அலங்காரம்,
புதுசாப் பூத்தக் கடைகள், விதவிதமான பாடல்கள்,
தேர் நகரும் போது எழும் சப்தம்,
ஆசையோடு போய் தேர் வடம் தொட்டதால் கிடைத்த உதை அத்தனயும் அந்த இரவை விழுங்கியிருந்தது..

அதெல்லாம் பழய கதை...
இனிமே கோயில் பக்கமே போககூடாது என்ற முடிவுடன்
பட்டணத்தில் இருக்கும் தன் சித்தி வீட்டில் இருந்து படித்து ,
பட்டமும் பெற்று
இன்று கலக்டர் அளவுக்கு உயர்ந்தும் விட்டான்..
அதுவும் அவன் ஊர் இருக்கும் மாவட்டத்திலேயே உத்யோகம் ...

இரண்டு மாமாங்கம் முடித்து ஊருக்குள் கலெக்டர் முத்திரையோடு நுழைகிறான்...
வரும் வழியில் தேர் கம்பீரமாக நிற்கிறது
உயர்ஜாதிக்காரன் தொட்டதாலொ என்னவோ என மனதில் நினைத்துக் கொள்கிறான்..
ஊர் பெரியவர்கள் மரியாதையை எற்றுக்கொண்டு தன் தந்தையின் காலில் விழுந்து வணங்குகிறான்...
நாட்டாமை வெளியில் நிற்கிறார் என ஒருவர் சொல்ல உள்ளே வரச்சொல் என்கிறான்...
என்ன விஷயம் என வினவ..............
வேற ஒன்னுமில்ல ஐய்யா,
நம்ம ஊர்ல வருசா வருஷம் தேர் திரு விழாவ சிறப்பா நடத்திட்டு வர்றோம்...
இந்த வருஷம் நீங்க வந்து வடத்த பிடிச்சு தொடங்கி வக்கனும்..
மென்னு விழுங்கினார் நாட்டாமை....


Wednesday, November 29, 2006

பிறவி குணம் (சிறுகதை)

தனிமையும் தமிழும் எனக்கு மிகவும் பிடித்தவை அதுவும் இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால் ஏக ச்ந்தோஷந்தான்.... ..
அந்த சந்தோஷ நாட்களில் எத்தனையோ கதைகளோடு வழ்ந்திருக்கிறேன்,
எத்தனையோ கவிதைகளோடு ஒன்றியிருக்கிறேன்,
எத்தனையோ கட்டுரைகளை உணர்ந்திருக்கிறேன்,

இருப்பினும் ஒரு ஆதங்கம்... எடுக்கும் எனது மூளைக்கு கொடுக்கும் சக்தி இல்லையோ என்றுதான் ..
படிக்கும் சக்தி இருக்கும் எனக்கும் படைக்கும் சக்தி இருக்கிறதா என்ற நிலை அறிய நானும் சிந்திக்க தொடங்கினேன்..
வாழ்க்கையை உணர்த்தும் நிகழ்வுகளை கதையாக்கும் முயற்சியில் கரு தேடலானேன்..
இரவு நெடுநேரம் மூளையைப் பிசைந்தும் எவ்வித பொறியும் தென்படவில்லை..
காத்திருந்த தூக்கத்திற்கு வழிவிட்டு நிசப்தமானேன்..

காலை 7 மணிக்கெல்லாம் என்னை உசுப்பிவிட்டு காலம் தவறாது தன் கடமை செய்தது கடிகாரம்...சோம்பல் முடித்து, டீயைக் குடித்து காலை கடன் முடிப்பதற்குள் மணி 8 ஐத் தாண்டியிருந்தது.. பரபரப்பும் படபடப்பும் கலந்த நிலையில் கம்பேனிக்குத் தயாரானேன்.....

ப்ரோமொஷன் கிடைத்த மகிழ்ச்சி, புதிய பதவியின் புத்துணர்ச்சி இன்னும் என்னை அவசரப்படுத்தியது..
கிளம்பினேன்.. தினமும் வாசல் வந்து வழியனுப்பும் அம்மாவை நோக்கினேன்...

அதற்குள்...." என்னடா இந்த நேரத்துலயா கெள்ம்புறது? இன்னிக்கு நீ காலண்டரப் பாக்கல 9 மணி வரைக்கும் எம கண்டம்னு போட்டிருக்கு..
இப்ப போயி கெளம்புதம்னு சொல்லுத..
இன்னிக்குதான் பெரிய ஆபிசரா வேலைக்கு போற..
கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்ரமா போ வேண்டியதான.."
சொல்லிவிட்டு நகன்றாள் அம்மா...
அம்மாவின் நம்பிக்கையை அலசிப்பார்த்தேன் மூடநம்பிக்கையின் உச்சம் தெரிந்தது...

இன்னும் தொடர்கிற்தே இந்த அவலம் என்ற ஆதங்கத்தோடும்,ஒருவேளை நல்ல நேரத்தில் கிளம்பி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்? எனும் கேள்விகளோடும் கடிகாரம் பார்த்தேன் எமகண்டத்தை முடித்து வைத்திருந்தது..

மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டேன் நல்லநேரத்தில் அசம்பாவிதம் நடந்தால்? தெளிவாய் கிளம்பினேன் இரவு விட்டுப்போன கதைக்கான கருவோடு..
அலுவல் நேரத்து மிச்சங்களில் எல்லாம் கருவை வளர்க்க ஆரம்பித்தேன்..
அலுவல் முடிந்து வீடு வந்தேன்..கதையை ப்ரசவித்தேன்..

மூடநம்பிக்கையே கதையின் கரு என்பதால் அதையே பெயராக்கி மீண்டும் ஓர் முறை வாசித்துப் பார்த்தேன்...
நிறைவான திருப்தியோடும், நிச்சயம் நம் கதை பிரசுரமாகும் எனும் நம்பிக்கையோடும் அந்தப் பிரபல இதழின் முகவரி பதித்து விடியலுக்காக காத்திருந்தேன்..

பொழுதும் புலர்ந்தது...ஆபிஸ் செல்லும் முன் முதல் வேலையாக போஸ்ட் ஆபிஸ் சென்று நம் கதையை அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும் ,
முதல் படைப்பாயிற்றே என்ற ஆராவாரத்தோடும் இன்றும் அவசரமானேன்...

இதோ...இதோ... கிளம்புகிறேன் ..வாசல் வந்து வழியனுப்ப அம்மாவும் ரெடி.. கிளம்புகிறேன்..

முடியவில்லை ஒரு சிறு உறுத்தல் "இது நான் அனுப்பும் முதல் படைப்பு, இது ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அடுத்தப் படைப்பு ஆனந்தமாய் தொடரும்.."எதற்கும்......எதற்கும்.....காலண்டரைப் பார்க்கலாமா?..காலண்டரை நெருங்குகிறேன்...

கொட்டை எழுத்துக்களில் தெளிவாய்த் தெரிந்தது இன்று கரிநாள் என்று...

வேறு என்ன செய்ய நல்ல நாளுக்காய் காத்திருக்கிறேன்.....


Sunday, November 26, 2006

அன்பு

மனிதனை
நேசிக்கும் மரபு
மனதில் பூக்கும்
மாண்பு
உயிரை துலக்கும்
விசித்திரம்
ஆயுளை நீட்டிக்கும்
அமிர்தம்
உணர்ச்சிகளின்
டானிக்...........


ஊர்க்குருவி

நாம் என்ன பருந்தா உயரப் பறந்து உலகை ரசிக்க..
ஊர்க்குரிவிதானே என இதுநாள் வரைக்கும் என் சிறகை விரிக்கும் முயற்சியற்று முடங்கிக் கிடந்தேன்,ஆனால் வலைப்பதிவு எனும் வானம் எனக்காய் விரிந்து கிடக்கையில் நாம் ஏன் பருந்தாகும் பயிற்சி எடுக்க கூடாது?இதோ சுயமாய் நான் முயற்சிக்கிறேன்...உங்களோடு நானும் சேர்ந்து என் பயணத்தை தொடர.....