தேடலும் தேடல் நிமித்தமும்..

Friday, December 1, 2006

கற்பவை கற்றபின்...(சிறுகதை)

பாவம் இந்த பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும்?..அதற்காக இப்படியா?..
கண்ணீர்த் துளிகளை உதிர்த்துக் கொண்டே விரிந்திருக்கும் கோரம்பாயில் விரிந்து கிடக்கும் தன் அஞ்சு வயது பிஞ்சு மகனுக்கு உப்பிய காயங்களில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தான் ஏழுமலை.

அப்படி அவன் என்னதான் செய்துவிட்டான்?..
இப்படி துவைத்து எடுத்து விட்டார்களே.. நினைக்கும் போதே நெஞ்ச குமுறினான் ஏழுமலை...

சாய்ங்காலம் தேர் வீதியில் நடந்த சம்பவத்தால் ரெம்பவும் நொறுங்கிப் போயிருந்தான் ஏழுமலை, அதுவும் இந்த சிறு வயதில் அந்த சிறுவன் கேட்ட கேள்விகள் இன்னும் அவனை ரணப் படுத்தியது..

"அப்பா..ஏம்பா நாம மட்டும் சாமி கும்பிட கூடாதா?..
எல்லாப் பசங்களூம் கோயிலுக்குள்ள போயி சாமிய பாக்காங்க நம்மள மட்டும் ஏம்பா உடமாட்டுக்காங்க ?
நா இழுத்தா மட்டும் தேர் நகராதா?
அவங்கெல்லாம் வடத்த தொடுதாங்க நா போயி தொட்டா மட்டும் ஏம்பா என்ன இப்படி அடிச்சிட்டாங்க?
நீங்கதாம்பா சொன்னீங்க கடவுள்தான் இந்த உலகத்தயே காக்கிறவர்னு..
அந்தக் கடவுள நாம மட்டும் ஏம்பா பாக்ககூடாது?...
உடல் காயமும் உள்ளக்காயமும் அவனை பெரிதும் பாதித்ததால் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்..

என்னதான் செய்வான் ஏழுமலை...
எப்படி அச்சிறுவனுக்குப் புரிய வைப்பது?
நாமெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள்,
நாம எப்பவுமே அவங்களுக்கு கீழதானு சொன்னா இவனுக்கு புரியுமா?
நாம தேர் வடத்த தொட்டா நகராதானு கேக்குறானே
நாம தேர் வீதி போனதே தீட்டு அல்லவா?
ஏதோ தேர் திருவிழாவ பாக்க ஆசபட்டானேனு தெரியாம கூட்டுப்போய்ட்டேன் ஆனா இப்படி ஆயிடுச்சே..
கண்ணீர் வற்றிய கண்களோடு தன் மகனை அணைத்து கண் அயர்ந்தான் ஏழுமலை.

ஆனால் அந்த பிஞ்சு உள்ளத்துக்கோ இரவு முழுதும் தேர் வீதியைப் ப்ற்றிய நினைப்புதான்...
தன் வயசுப் பசங்க ஓடி விளயாட்றது,
மேள சத்தம், பந்தல் அலங்காரம்,
புதுசாப் பூத்தக் கடைகள், விதவிதமான பாடல்கள்,
தேர் நகரும் போது எழும் சப்தம்,
ஆசையோடு போய் தேர் வடம் தொட்டதால் கிடைத்த உதை அத்தனயும் அந்த இரவை விழுங்கியிருந்தது..

அதெல்லாம் பழய கதை...
இனிமே கோயில் பக்கமே போககூடாது என்ற முடிவுடன்
பட்டணத்தில் இருக்கும் தன் சித்தி வீட்டில் இருந்து படித்து ,
பட்டமும் பெற்று
இன்று கலக்டர் அளவுக்கு உயர்ந்தும் விட்டான்..
அதுவும் அவன் ஊர் இருக்கும் மாவட்டத்திலேயே உத்யோகம் ...

இரண்டு மாமாங்கம் முடித்து ஊருக்குள் கலெக்டர் முத்திரையோடு நுழைகிறான்...
வரும் வழியில் தேர் கம்பீரமாக நிற்கிறது
உயர்ஜாதிக்காரன் தொட்டதாலொ என்னவோ என மனதில் நினைத்துக் கொள்கிறான்..
ஊர் பெரியவர்கள் மரியாதையை எற்றுக்கொண்டு தன் தந்தையின் காலில் விழுந்து வணங்குகிறான்...
நாட்டாமை வெளியில் நிற்கிறார் என ஒருவர் சொல்ல உள்ளே வரச்சொல் என்கிறான்...
என்ன விஷயம் என வினவ..............
வேற ஒன்னுமில்ல ஐய்யா,
நம்ம ஊர்ல வருசா வருஷம் தேர் திரு விழாவ சிறப்பா நடத்திட்டு வர்றோம்...
இந்த வருஷம் நீங்க வந்து வடத்த பிடிச்சு தொடங்கி வக்கனும்..
மென்னு விழுங்கினார் நாட்டாமை....


0 comments: