உழவர் திருவிழா !
பாட்டாளி வர்க்கத்திற்கு
இன்றுதான்
பட்டமளிப்பு விழா !
நரம்புகள் வரம்பு மீற
வியர்வைகள் வெள்ளை ரத்தமாய் கசிய
கழனியில் கால் பதிக்கிறானே
அந்தக் கடவுளின் திருவிழா!
உயிரை விதைத்து
பயிரை வளர்த்து
உன்னையும் என்னையும் உயிர்ப்பித்தானே
அந்த உழவனின் திருவிழா!
சூரியனை நிலவாக்கி
கடும் சூட்டைப் பனியாக்கி
உயிரை அற்பமாக்கி
உனக்காக வாழ்கிறானே
அந்த உத்தமன் திருவிழா!
நாவின் இனிமைக்கும்
உன் நவரச உணவிற்கும்
தன் ஆவி இழக்கிறானே
அந்த நல்லவன் திருவிழா!
விண்ணுக்கு சென்று
நிலவைத் தொடுபவன்
நீயாக இருக்கலாம்
ஆனால்
மண்ணுக்குள் புதைந்து
பல மணிகளைத் தருபவன்
என்னவன் அல்லவா!
என்ன நிலவிலும்
நீர் இருக்கிறதா?
போதும்! போதும்!
பூமியிலேயே
இப்புண்ணியவன் படும் கஷ்டம்!
புசிப்பது நாம்
நன்றாய் வசிப்பது நாம்
வாழ்வில் கசிவது மட்டும்
அவன்தானாம்
அது ஏன் ?
ஊரைத் திருத்தலாம்
நாட்டைத் திருத்தலாம்
ஏன்!
இந்த உலகையே திருத்தலாம்
ஆனால்
என்னவன் மட்டும்
மண் நிலம் திருத்தாவிடில்
உன் நலம் எங்கே
உயரப் போகிறது!
வியர்வைத் துளிகளின்
வித்தியாசப் பரிமாணம்தான்
கரும்புச் சாறு
இனிப்பென்றா நினைத்துவிட்டாய்!
ஆம்!
உன் உளம் இனிப்பாக
என்னவன் உரமாகிறான்.
அதோ பாருங்கள்
தன்னை ஈன்றவனுக்கு
தலை வணங்கும் பயிர்களை!
அங்கேத் தெரிவது
நெல் மணிகள் அல்ல
என்னவன் சிந்திய
இரத்தத் திட்டுக்கள்!..
0 comments:
Post a Comment