தேடலும் தேடல் நிமித்தமும்..

Saturday, March 8, 2008

அதோ!
உச்சந்த் தலையில்
வெயிலை உடுத்தி
உடற்சுவற்றில்
உப்பை வடித்து
உழுது உழுது தேய்கிறானே
ஓர் பாமரன்
அவர் என் அப்பாதான்...

ஓர் அந்திக்கு முந்திய
அவசரப் பொழுதில்
அப்பா பசியை பொறுக்காத அம்மா
அரிசிச் சோற்றைக்
கொடுத்தனுப்பினாள்
காய்ந்தவயிற்றோடு
கழனியில் நிற்பவருக்கு..

வறப்பு சகதியில்
வதைக்கும் வெயிலில்
கையில் சோற்றோடு நான்..

பூரிப்பார் என்று
புன்னகை செய்கிறேன்.

வறண்ட குரலில்
தோள் பதிந்து சொன்னார்
"எங் கஷ்டம்
என்னோட போகட்டும்
எதுக்குப்பா இந்த
வெயில்ல வந்த"!

அதோ
புல்லறுக்கப் போகயிலும்
பிள்ளையையே நினைத்து
புல்லோடு சேர்த்து
விரலறு பட்டு
சிவப்பாய் வழிகிறதே
தாய்ப் பாலின் ஒரு பகுதி
அக் குருதியின் சொக்காரி
என் அம்மாதான்..

பள்ளிச் சட்டைப்
பழசாய்ப் போனதால்
புதிய சீருடை
வேண்டும் என்கிறேன்..

பள்ளிக்குச் சென்று
வீடு திரும்பையில்
பூத்துக்கிடந்தன
புதிய சட்டைகள்

உடனே அணிந்து
உவகை மிகுந்து
நன்றி சொல்ல
நானும் நிமிர்கிறேன்...
அவள்
காதணி அவிழ்த்ததை
மறைத்தபடியே தொடர்கிறாள்
"நீ ராச மாதிரி
இருக்கடா.."

அதோ
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வைஎன
எதுவுமே இல்லாது
குனிந்து குனிந்து
கூன் விழுந்து
பீடி சுற்றி மாய்கிறாளே
ஓர் சகோதரி
அவள் என் தங்கைதான்..

தன் குருதியைப்
பலமுறை
என் எழுதுகோலுக்கு மையாக்கிய
அவள்தான் சொல்கிறாள்

"நீ ந்ல்லா வருவேனு
நம்பிக்கை இருக்கு
எங்களப் பத்தின
கவலைய விடு
படி! படி! படி!...

இப்படி
பொத்தி பொத்தி
பாத்து பாத்து
பாசத்தோடப் பின்னப்பட்டவந்தான்
நான்...

ஆனாலும்
அவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை...

உச்சி வெயில்ல
நான் வேர்க்க வேர்க்க
அலையுறதும்...

கெடச்சத சாப்ட்டு
கிழிஞ்சி போயி
கெடக்குறதும்...

வருத்தப்பட்டு
பாரம் சுமக்குறதும்....

ஆனாலும்
அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை...

தயவு செய்து
சொல்லிவிடாதீர்க்ள்...

ஏனெனில்
வருத்தப்பட அவர்களுக்கு
நேரமிருக்காது
செத்துப்போகக்கூடும்.




0 comments: