அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...
அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது..
அப்படியானால்
உலகை ஓர்முறை சுற்று
ஒட்டு மொத்தமும்
உன்னால் வசந்தமாகட்டும்.!
அதோ!
பசுந்தளிர்களின் நுனியில்
காத்துக் கிடக்கிறது
நேற்றைய மழையின்
மிச்சத்துளிகள்
உடனே வெளியில் வா
உன் மீது விழுந்து
பிறவிப்பயன் எய்தட்டும்....
கதிரவன் வந்து
கற்புடைக்கும் முன்
சாப விமோச்சனம்
கிடைத்து விடாதா என
புற்களின் நுனியில்
புலம்பிக் கிடக்கிறது
பனித்துளிகள்..
வா வந்து பதித்துவிட்டுப் போ
உன்
பாதகமலங்களை....
தயவு செய்து
துயில் எழு!
இல்லையேல்
இருள் இன்னும்
நீளக் கூடும்..
ஆம்!
உன் முகத்தில்
முழிப்பதற்காகவே
தன் முகத்தை
மூடி நிற்கிறான் சூரியன்...
எவ்வளவு நேரம்தான்
மலராமல் இருப்பது?
வா ! வந்து
வாசம்(ல்) திறந்து விடு
பாவம் அரும்புகள்...
கொடுத்து வைத்தவளடி நீ
வார்த்தைகள் கூட
உனக்காய் தோன்றியதுபோல்
வந்து குவிகிறதே!

முதலில் உனக்கு
திருஷ்டி சுற்றி போடவேண்டும்
திருஷ்டியோடு சேர்ந்து
சகலமும்
உன்னை சுற்றுகிறதே!
யார் சொன்னது?
ஒளீச்சேர்க்கை என்பது
தாவரத்திற்கு மட்டும்தான் என்று..
அவள் தாவணீ செல்லும்
திசை நோக்குங்கள்
உங்கள்
உயிர் செல்களும்
ஒளியை ஒட்டிக்கொள்ளும்..

சொல்லியிருக்க வேண்டும்
அவனிடம்!
சக தோழனாய்
என் சரித்திரம் புரிந்தவன்
சதா சர்வமும்
புகைத்தே கழித்தவன்..
சொல்லியிருக்கலாம்தான்...
மூச்சுக்குள் புகை நிரப்பி
தேனீர் தொட்டுக் கொள்ளும்
தெருக் கடைப் பொழுதுகளிலேனும்..
அலுவலக நேரத்து
மிச்சங்களில் எல்லாம்
ஆளாய் பறக்கும்
"ஒரு தம்" நொடிகளிலேனும்...
சின்னதாய் ஒரு உலகம்
சிந்தனை ஊக்கி
எனும்
சிகெரெட் புராண
தருணங்களிலேனும்..

அக்கா பிள்ளை
ஐம்பது பைசா கேட்கும் போதும்
பிச்சைக் கிழவன்
பொக்கை வாய் இளிக்கும் போதூம்
மறுக்கும் அவனது கரங்கள்
கரன்சியை
காகித சாம்பலாக்க
அனுமதிக்கும் நொடிகளிலேனும்...
சொல்லியிருக்கலாம்தான்...
என்ன செய்வது?
கூடி இருக்கையில்
குறைகள் மறைப்பதும்
பிரிவைக் குறை தரின்
குமுறித்துடிப்பதும்
பாழும் மனிதனின்
பழக்கமாயிற்றே!
இருப்பினும்
சொல்லத் தோணிற்றுஅவன் குழந்தை
அம்மா என்று
முதல் வார்த்தை முகிழ்க்கையில்
ஆனந்தப்படாத
அவன் மனைவிஅப்பாவை விளித்தால்
என் செய்வேன் என
கதறி அழுத கணத்த நொடிகளில்...
ஆதலால் தோழா....
வேண்டாம் உனக்குப் புகை
அது
எமனின் இன்னொரு வகை..
சுவாசம் என்பது மூச்சு
அதில்
சுத்தம் இல்லையேல் போச்சு...
உன்
விரல் இடுக்கிலேயே
நசுக்கப் படுகிறது
உனக்கான சந்ததி...
உன்னாலேயே
வைக்கப்படுகிறது
உன் ஆண்மைக்கான ஆப்பு...
உன் நரம்புகள் நாசம்
ஜீன்களில் விஷம்
சுவாசம் முழுதும் சாக்கடை....
புகையோடு சேர்த்து எரிகிறது
உன் பொருளாதாரத்தின்
ஒரு பகுதி.....
மறந்துவிடடதே
பிராண வாயுவின்
பிரதாண இடத்தில்
ஆயுளை நீட்டிக்கும்
அறைகளின் உட்சுவற்றில்
தயாராகிறது
உனக்கான ஒரு பாடை...
புகை தேங்கும் காற்றறை
உன் சிதை மூடும்
கல்லறை..
பாவம் உன் இரத்தம்
ஆக்சிஜன் அற்று
நிக்கோட்டின் பிடிக்குள்....
சொல்லிமுடித்துவிட்டேன்..
அவனுக்கு புரிய
வாய்ப்பில்லை
இருப்பினும்
அவன் கல்லறைக்கு அருகில்
அவசர இடம் தேடும்
இன்னொரு
நிக்கோடின் மனிதனுக்கு??!!

அதோ!
உச்சந்த் தலையில்
வெயிலை உடுத்தி
உடற்சுவற்றில்
உப்பை வடித்து
உழுது உழுது தேய்கிறானே
ஓர் பாமரன்
அவர் என் அப்பாதான்...
ஓர் அந்திக்கு முந்திய
அவசரப் பொழுதில்
அப்பா பசியை பொறுக்காத அம்மா
அரிசிச் சோற்றைக்
கொடுத்தனுப்பினாள்
காய்ந்தவயிற்றோடு
கழனியில் நிற்பவருக்கு..
வறப்பு சகதியில்
வதைக்கும் வெயிலில்
கையில் சோற்றோடு நான்..
பூரிப்பார் என்று
புன்னகை செய்கிறேன்.
வறண்ட குரலில்
தோள் பதிந்து சொன்னார்
"எங் கஷ்டம்
என்னோட போகட்டும்
எதுக்குப்பா இந்த
வெயில்ல வந்த"!
அதோ
புல்லறுக்கப் போகயிலும்
பிள்ளையையே நினைத்து
புல்லோடு சேர்த்து
விரலறு பட்டு
சிவப்பாய் வழிகிறதே
தாய்ப் பாலின் ஒரு பகுதி
அக் குருதியின் சொக்காரி
என் அம்மாதான்..
பள்ளிச் சட்டைப்
பழசாய்ப் போனதால்
புதிய சீருடை
வேண்டும் என்கிறேன்..
பள்ளிக்குச் சென்று
வீடு திரும்பையில்
பூத்துக்கிடந்தன
புதிய சட்டைகள்
உடனே அணிந்து
உவகை மிகுந்து
நன்றி சொல்ல
நானும் நிமிர்கிறேன்...
அவள்
காதணி அவிழ்த்ததை
மறைத்தபடியே தொடர்கிறாள்
"நீ ராச மாதிரி
இருக்கடா.."
அதோ
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வைஎன
எதுவுமே இல்லாது
குனிந்து குனிந்து
கூன் விழுந்து
பீடி சுற்றி மாய்கிறாளே
ஓர் சகோதரி
அவள் என் தங்கைதான்..
தன் குருதியைப்
பலமுறை
என் எழுதுகோலுக்கு மையாக்கிய
அவள்தான் சொல்கிறாள்
"நீ ந்ல்லா வருவேனு
நம்பிக்கை இருக்கு
எங்களப் பத்தின
கவலைய விடு
படி! படி! படி!...
இப்படி
பொத்தி பொத்தி
பாத்து பாத்து
பாசத்தோடப் பின்னப்பட்டவந்தான்
நான்...
ஆனாலும்
அவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை...
உச்சி வெயில்ல
நான் வேர்க்க வேர்க்க
அலையுறதும்...
கெடச்சத சாப்ட்டு
கிழிஞ்சி போயி
கெடக்குறதும்...
வருத்தப்பட்டு
பாரம் சுமக்குறதும்....
ஆனாலும்
அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை...
தயவு செய்து
சொல்லிவிடாதீர்க்ள்...
ஏனெனில்
வருத்தப்பட அவர்களுக்கு
நேரமிருக்காது
செத்துப்போகக்கூடும்.

விரும்பிய படியே
மணாளன் அமைய
விரும்பும் பாவையர்
ஒன்று கூடி
இருக்கும் நோன்பே
பாவையர் நோன்பென்றும்
கடவுளை விரும்பிய
ஆண்டாள் கூட
கண்ணனை அடைந்தாள்
என்பதுதான்
இந்த நோன்பின் சிறப்பென்றும்
மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!
அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?

அன்பில்லா இறைவனுக்கு
ஒரு வேளை
நீ இருந்துவிட்டால்
எனும் சந்தேகத்தோடு
தொடர்கிறேன்...
பாவம்,புண்ணியம்
இன்பம்,துன்பம்
நன்மை,தீமை
இவையெலாம்
உன் பார்வைக்கு
உட்பட்டவையே

நீதான் உயிர்களை
படைப்பதாய்
புராணமும் தன்
புழுகலை
காலத்தின் மீது
தடவிக்கொண்டே வருகிறது
பின் ஏன்
நல்லவன்,கெட்டவன்
உயர்ந்தவன்,தாழ்ந்தவன்
ஏழை,பணக்காரன்
நோயாளி,சுகவாசி
என்ற
துருவ வித்தியாசங்கள்?
படைக்கும் போதே
நல்ல ஜீன்களை
விதைத்து
கெட்ட ஜீன்களை
விடுக்கும்
வித்தை தெரியவில்லையா
உனக்கு?
எத்தனையோ யுகங்கள்
கழிந்த பின்னுமா
உன்
விஞ்ஞான அறிவில்
விருத்தியில்லை?
உன் பெயர்
சொல்லித்தானே
நீ படைத்த உயிரை
நீ படைத்த உயிரே
கொன்று குவிக்கிறது
இதுதான் உன்
படைப்பிலக்கணமா?
நீ மட்டும்
நினைத்த போதெல்லாம்
அவதாரம் எடுத்து
அற்புதம் நிகழ்த்தி
அசத்தல் நாயகனாய்
அச்சேறிவிட்டாய்..
காதல்,காமம்
கேலி,கிண்டல்
என
சுவாரஸ்ய வாழ்வை
தொடர்கதையாக்கினாய்
ஆனால்
உன்
தொண்டர்கள் மட்டும்
நிறைந்த ஏக்கங்களோடு
கிழிந்த கோவணங்களாய்
நடிகனுக்கும் உனக்கும்
என்ன வித்தியாசம்?
நடிகனின்
அவதாரத்தை
ரசிகன் ரசிக்கிறான்
தன் மானம் கிழிந்ததை
மற்றையோர்
ரசிப்பதுகூட தெரியாமல்
உன் தொண்டர்களும்
அப்படியே...
இருப்பினும்
நடிகன் என்பன்கூட
நிஜமாகிறான்
கண்கூடாய் சில
நல்லவை செய்வதால்
ஆனால் நீயோ
இல்லாதவன் என்று
தெரிந்தபோதும்
இருப்ப்தாய்த்தானே
இலக்கியம் விரிகிறது
ராமராகவும்
யேசுவாகவும்
நபிகளாகவும்
புத்தராகவும்
என் அவதாரங்கள்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கும் எனும்
உனது
கட்டுக் கதைகளை
இனி நம்பத்
தயாராக இல்லை
இது கலியுகம் அல்ல
பலியுகம்
உணர்வுகள் பிதுங்கிய
வலி யுகம்
உன்னை நினைக்கும்
அந்தக்
கணங்களில்கூட
எங்கள்
கால்களின் கீழே
குண்டுகள் வெடிக்கக் கூடும்
ஆதலால்
எங்கள்
கவனம் முழுதும்
எச்சரிக்கை நோக்கியே
ஆலயங்கள் தோறும்
அபாயங்கள்
இருப்பதாய்த்தான்
எங்கள் குழைந்தைகள்
கற்றுக்கொள்கிறார்கள்
மத அடயாளங்கள்
மரணத்தின்
வாசற் கதவுகள்
என்பதைப்
புரிந்துகொண்டுவிட்டோம்
ஆதலால்
ஒன்று செய்..
நல்லதோர்
உலகைக் கொடு
இல்லையேல்
உன் ராஜினாமாவை
நீயே பகிரங்கப்படுத்து..
ஒட்டுமொத்த உயிர்களும்
உன் மீது
நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
கொண்டுவரும் நாள்
வெகு தொலைவில் இல்லை...
என்னதான் இருந்தாலும்
மறக்கமுடியாதது
கடந்த காலம் மட்டும்தான்...
நினைவிருக்கிறதா தோழா?
ஓர் மதியத்தின் உச்சிவேளை
அகோர பசி என்று
என்னிடம்
அடைக்கலமானாய்
உயிர் போகிறதென்று
விழி விரித்தாய்...
வறுமையின் தேசியபானம்
கண்ணீர் என்பதை
அன்றுதான்
உணர்ந்தேன்....
ஒரு நேரத்து பசியைக்கூட
உன்னால் தாங்க முடியாது
என்பது எனக்கு தெரியும்....
எப்படியேனும்
உன் பசி போக்கி
உயிர் நீட்டவேண்டும்
எனும் நோக்கில்
உனக்கான இரையை
தேட முற்பட்டேன்...
உன் மெலிதான புன்னகை
என் மீது
நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை
உறுதிசெய்யும்
அதே வேளையில்.....
என் கால்கள் இயங்க மறுக்க
மயக்கமுற்று
மூச்சையானேன்...
பதறிய நீ
தண்ணீர் தெளித்து
என்
தலை தாங்கினாய்....
இருண்ட கண்களை
இயக்கிப் பார்த்தேன்
மங்கலாய்
நீ தெரிந்தாய்...
செவி அடைப்பையும் மீறி
மெல்லியதாய் புன்னகைத்தோம்
தூரத்தில் எங்கோ ஒலித்த
பட்டமளிப்பு விழாவின்
கல்லூரிக் கரவொலியைக்
கேட்டுக் கொண்டே......
என்னை வியர்டு விளையாட்டுக்கு அழைத்த திருமதி மங்கை அவர்களுக்கு நன்றி...!வித்தியாச குணங்களை வரிசைப்படுத்துமாறு வேண்டுகோள்...இதோ தொடர்கிறேன்...
வித்தியாசம் என்பதே புதுமையின் வெளிப்பாடுதான்..வழக்கமான யதார்த்தத்திலிருந்து புதியதாய் ஓர் யதார்த்தம் சேர்க்கும் முயற்சி...வித்தியாசம் என்பது மட்டும் இல்லையெனில் நாம் இன்னும் அம்மணமாய்த்தான் அலைந்து கொண்டிருப்போம்..
ஆதி மனிதன் அவன் போக்கில் அலைந்து திரிகையில் யாரோ ஒருவன் மட்டும் அம்மணத்தின் அவஸ்தயை உணர்வதில் வித்தியாசப் பட்டிருக்கிறான்..அதன் பிறகே நாம் இலை ஆடை தரித்து சில இம்சைகள் தவிர்த்தோம்..
ஆம்..! எடிசனின் வித்தியாசம் ஒளியை விரித்தது..ஒளி இந்த உலகயே விரித்தது....அந்த விரிந்த உலகமோ ஓர் எலியின் பிடிக்குள்(அதாங்க computer mouse)....என்ன விந்தை இது ஓர் எலியைப் பிடித்து வைத்து இந்த உலகையே உட்கொள்கிறோம்!....
எனது வித்தியாசம் என் பால்யத்திலேயே தொடங்கிற்று எனலாம்..
எப்பொழுதெல்லாம் என் தாயார் என்னையும்,என் தங்கையின் காதில் புள்ளியாய்த் தெரியும் வடுவையும் ஒன்றாய் பார்க்க நேர்கிறதோ அப்பொழுதெல்லாம் என்னை செல்லமாய் திட்டும் வார்த்தை "பாவி பய பால பூராம் குடிச்சிட்டு தங்கச்சிய மட்டும் நோஞ்சான் ஆக்கிட்டான்" என்பதுதான்..
ஆம்! நான் குழந்தயா இருக்கச்சே தாய்ப்பால் தவிர வேற எந்த உணவும் எனக்கு ஆகாதாம்,சதா சர்வகாலமும் தாய்ப்பாலே உணவாக கிடந்திருக்கிறேன்...
எனது உயிரை நீட்டிக்க தன் உயிரையே சமைத்துக் கொடுத்திருக்கிறாள் அந்த தாய்..தன் உயிர் உருகி வெள்ளை ரத்தமாய் கசியும் அவ்வமுதை நான் உறிஞ்சும் போதெல்லாம் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் என் தாய் ..அவ்வமுது தவிர வேறெதுவும் உணவாய்ப் படாததால்,நான் பக்குவப் பட்ட பின்னும் பால் தருவதைத் தொடர்ந்திருக்கிறாள்..என் விழிகள் சுரக்காதிருக்க அவள் அமுது சுரந்தாக வேண்டும்.... இது என் தங்கையின் பிறப்புக்கு பின்னும் தொடர்ந்திருக்கிறது...
ஓர் நாள் அமுதைத் தேடி அம்மாவை நெருங்குகிறேன் அங்கே என் தங்கை தன் ஆயுளை நீட்டித்து கொண்டிருக்கிறாள்..நான் அருகில் சென்று விலக்கியும் அவள் அமுது சுவைப்பதை நிறுத்தவில்லை..
மார்போடு என்னை அணைத்து பாலை மட்டுமல்ல பாசத்தையும் ஊட்டும் அந்த சுகம் கிடைக்காதோ என்ற ஆத்திரத்தில் எனக்குமட்டுமே சொந்தம் எனும் ஏகபோக உரிமையில்..அருகில் கிடந்த பாத்திரத்தை வீசியிருக்கிறேன்...அது ஒரே நேர்கோட்டில் ஓங்கி கிழித்திருக்கிறது என் தங்கையின் செவியை..
இரத்தம் சொட்ட சொட்ட என் தங்கை அழுது துடித்திருக்கிறாள்..
பின் என் தங்கை புட்டிப் பாலுக்கும் நான் மீண்டும் தாய்ப் பாலுக்கும் மாற்றப்பட்டிருக்கிறோம்... இப்படி வில்லத் தனமாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது எனது வித்தியாசம்..
சென்ற தீபாவளிக்கு ஊருக்கு சென்று தங்கையைப் பார்த்தேன் தாய்மையின் மகிழ்ச்சியில் நெஞ்சோடு அணைத்திருந்தாள் அவளின் குட்டி தேவதையை...அருகில் தன் தாயின் செவிகளை வருடிக் கொண்டெ
" புட்டிப் பாலை"ருசித்துக் கொண்டிருந்தான் என் மருமகன்...உன் தங்கையை எடுத்து செல்லவா என்று விளையாட்டுக்காய் அவனிடம் கேட்டு தங்கயைத் தொட முயல்கிறேன் அவன் புட்டியை எடுத்து வீச முற்படுகிறான்...நான் சிரித்துக்கொண்டேன் ..மாமனுக்கு ஏத்த மருமகன்தான்..!
என் தந்தையின் நெஞ்சு முடிகளில் நீந்திய காலங்களில் அவரின் செல்லக் கொஞ்சல்களுக்கிடையில் என்னை செதுக்கவும் முயற்சிப்பார்..கருஞ் சிலேட்டில் வெள்ளையாய்க் கோடுகள் கிழித்து கொக்கு,குருவிகள் அறிமுகம் செய்து வைப்பார்..நாமும் செய்தால் என்ன?நானும் முயற்ச்சித்து ஒருமுகப் பட்டேன்..எனது கலைக்கான முதல் சுழி அந்த கருஞ் சிலேட்டில் அன்றே பதிவாயிற்று...( pencil drawing state level price வாங்கியிருக்கேன்,...)
எனது உயர்கல்வி பருவம்...., இலங்கை வானொலி நேயர்களின் சொந்த கவிதையை சினிமா பாடல்களின் மெட்டிற்கு ஒலிபரப்பிய நேரம்..அட நாமும் செய்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஒரு பாடலை எழுதினேன்.....
வீட்டில் மட்டுமல்ல வகுப்பிலும் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது..எனது முதல் எழுத்து அன்று பதிவாயிற்று...குமுதம் bookல எனது கானா வந்திருக்குன்னா அதுக்கு காரணம் அக்கவிதை மற்றவற்றிலிருந்து வித்தியாசப் பட்டிருப்பதுதான்...
எங்க ஊர் பாண்டியப்பா டீக்கடையில பல குரல் கேசட் போட்டாச்சுன்னா மொத ஆளா ஓடிப்போயி கேசட் முடியிற வரைக்கும் கேட்பேன்...ஒரே ஆளு இத்தன குரல் பேசுராங்களே..நாமும்தான் பேசுவோமே என முயற்ச்சித்தேன்...ஓட்டு வீட்டு உள் மாடியில் ஓங்கி கத்த ஆரம்பித்தேன்....
பிறகு எங்கள் பள்ளியின் hostel dayல் முதன் முதலாக mic பிடித்து mimic செய்தேன்.....அது தொடர்ந்தது பல மேடைகளில்....எனது இந்த வித்தியாசம்தான் என்னை தமிழ் சினிமாவின் heroவாக்கியது.
.எனது இந்த வித்தியாசம் தான் எங்கோ ஓர் வயல்வெளியின் மண் காத்துக் கிடந்த என் ஏழைப் பெற்றோரை AVM studioவின் சான்றோர்கள் மத்தியில் பெரிதுவக்கச் செய்தது........பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்காமல் நாட்கள் நீண்ட போதிலும் தளராது நான் தரமாகிறேன் என்றால் அதற்கு காரணமும் இந்த வித்தியாசம்தான்..என் படத்தைப் பற்றி அறிய
www.chennaionline.com/film/newlaunches/04passport.asp (passport என்பது படத்தின் பெயர்)
குறும்புத்தனம் ! இன்றும் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பது...என்னையே என்னுள் refresh செய்வது.....இது வித்யாசத்தை மட்டுமல்ல வில்லங்கத்தையும் ஏர்படுத்தக்கூடியது...(எ.கா) பொதிகை மலையின் நீர் பரப்பில் நண்பர்களோடு எனது பொழுதுகள் மகிழ்ச்சியாய் விரிந்த காலம் ஓர் சாரல் பொழுது கவனிப்பாரற்று calm மாய் கழிகிறது.....போரடிப்பதாய் நண்பர்கள் சொல்ல நான் வித்யாசம் தேடினேன் .....மற்ற மக்கள் ஏதோ குளிக்க மட்டுமே வந்தவர்கள்போல் குளித்துக் கொண்டிருக்க.....அவர்களின் கவனம் எங்கள் மீது திரும்ப ஓர் வித்யாசம் உதித்தது...
ஆம்...நண்பர்கள் அனைவரயும் இலை தளை தரித்து ஆதி மனிதன் போல் getup change செய்தேன்......இலை ஆடை தரித்து கைகளில் இலைகளுடன் ஹோஹோ.....ஹொய்யாலா..ஹோ ஹோ ....என கோரசாக பாடி ஆடவும் செய்தோம்......அவ்வளவுதான் மொத்த கூட்டமும் அந்த வித்யாசம் கண்டு வியந்து தங்கள் சந்தோஷத்தைப் புதுப்பித்தார்கள்....கல கலப்பாய் அந்த பொழுதும் கழிந்தது....
எ.கா.2:கன்னியாகுமரி...விவேகானந்தரின் ஞானஸ்தலம்.....நண்பர்களோடு நானும் சுற்றிப் பார்க்கிறேன் ....எனக்குப் பின்னால் சில வெளிநாட்டார்கள் தஸ் புஸ்சில் வந்து கொண்டிருந்தார்கள்...அவர்களைக் கலாய்க்க வேண்டும் என் செய்வது ? வித்யாசம் தேடினேன்.....அவர்கள் எங்களைத் தொடர்வதை சாதகமாக்கிக் கொண்டேன்....ஒவ்வொரு இடமாய் பார்த்து வருகிறோம் பின்னால் அவர்கள்.....ஓர் இடத்தில் வெறும் பாறை வெயிலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது அதுவரைக்கும் அது சாதாரணப் பாறைதான் ஆனால் என் குறும்புத்தனத்தால் அதை தெய்வாமாக்கி தொட்டு கும்பிட ஆரம்பித்தேன் என் தோழர்களும் அதையே செய்தனர்....பாவம் தொட்டு வணங்க அந்த வெள்ளையர்களும் தயார்...எங்களுக்கு சிரிப்பாய் வந்தது..அந்த வணங்குதலை உள்வாங்கிக் கொண்டு எங்கள் வாய்களுக்குப் பூட்டு வைத்தோம்...பிறகு எங்களைப் பார்த்தார்கள் மீண்டும் வித்தியாசம் தேடினேன்..அந்த உச்சி வெயிலில் அப்படியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பித்தோம்.....மெல்ல கண்கள் திறந்தால் அவர்களும் உச்சி வெயிலை பொருட்படுத்தாது தியானித்திருந்தார்கள்....பாவம் அவர்கள் நம் மீது வைத்த நம்பிக்கை அது..நாசம் செய்தது இப்பொழுது புரிகிறது....பகவான் எங்களை மன்னிப்பாராக!..இன்னும் குறும்புத்தனங்களை பதியலாம்....உங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டே..!.
சரி எனப்பட்டால் எதுவரினும் எதிர்கொள்வேன்.....
st.xaviers autonomous college இப்படிசொல்லும் போதே என் நெஞ்சு நிமிரும்....ஓர் கவுரவம் பிறக்கும்...அப்படியோர் புனித கல்லூரி எங்கள் கல்லூரி....ஜாதீய தூசுகள் சிறிதும் இல்லாத சமத்துவக் கல்லூரி அது...ஆனால் எங்களுக்குள்ளும் ஜாதீயம் சதி செய்தது.....ஓர் chairman election என் சார்பில் எனது நண்பன் நிற்கிறான் சமூக முத்திரைப்படி அவனும் நானும் வேறு ஜாதி...எதிரணியிலும் எனக்குத் தெரிந்த நண்பன்தான் சமூக முத்திரைப்படி அவனும் நானும் ஒரே ஜாதி.....இப்பொழுது கவுரப் ப்ரச்சனை தலையெடுக்கிறது...என் ஜாதிக்கு எதிரானதால் எதிரணி என்னை துரோகி என முத்திரைக் குத்துகிறது......என்னோடு இருந்த என் ஜாதியர் பலரும் எதிரணியில் ஆஜர்....நான் மட்டுமே தனித்து என் நட்புக்காய் துணிகிறேன்..
தேர்தல் நடக்கிறது எதிரணி அரசியல் முக்கியப் புள்ளியின் வாரிசு என்பதால் கல்லூரி வாசலில் ஆசிட் முட்டை சகிதம் அடியாட்கள்...இருப்பினும் அவர்களை உசுப்பேத்த வாடைகைக்கு தவில் எடுத்து வந்து நானும் நண்பர்களும் கச்சேரியைத்தொடங்கினோம்...எங்கள் கல்லூரிக்கு அது புதுசுதான்....இருப்பினும் எங்கள் விபரீதத்தைப் பெருக்கினோம்....எது வரினும் எதிர்கொள்வோம் எனும் நம்பிக்கையில் தேர்தல் முடிவுக்காய் காத்திருந்தோம்....முடிவு எங்களுக்கு சாதகமானதால் ஓர் கலவரம் கணநேரத்தில் நடந்து முடிந்தது.....இப்படி சரியெனப்பட்டால் துணிவதும் துணிந்தபின் தயங்காது தொடர்வதும் இன்னும் தொடர்கிறது....
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது வெளிப்படையாய் இருப்பாதால்தான் இன்றும் எனக்கான நண்பர்கள் என் உயிரோடு கலந்திருக்கிறார்கள்.....யார் எங்கே என்றெல்லாம் கிடையாது மனதில் உள்ளதை அப்படியே வெளிக்கொணர்வேன்...
அப்பாட முடிச்சாச்சு...