நீயும் நானும்
என்னதான் இருந்தாலும்
மறக்கமுடியாதது
கடந்த காலம் மட்டும்தான்...
நினைவிருக்கிறதா தோழா?
ஓர் மதியத்தின் உச்சிவேளை
அகோர பசி என்று
என்னிடம்
அடைக்கலமானாய்
உயிர் போகிறதென்று
விழி விரித்தாய்...
வறுமையின் தேசியபானம்
கண்ணீர் என்பதை
அன்றுதான்
உணர்ந்தேன்....
ஒரு நேரத்து பசியைக்கூட
உன்னால் தாங்க முடியாது
என்பது எனக்கு தெரியும்....
எப்படியேனும்
உன் பசி போக்கி
உயிர் நீட்டவேண்டும்
எனும் நோக்கில்
உனக்கான இரையை
தேட முற்பட்டேன்...
உன் மெலிதான புன்னகை
என் மீது
நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை
உறுதிசெய்யும்
அதே வேளையில்.....
என் கால்கள் இயங்க மறுக்க
மயக்கமுற்று
மூச்சையானேன்...
பதறிய நீ
தண்ணீர் தெளித்து
என்
தலை தாங்கினாய்....
இருண்ட கண்களை
இயக்கிப் பார்த்தேன்
மங்கலாய்
நீ தெரிந்தாய்...
செவி அடைப்பையும் மீறி
மெல்லியதாய் புன்னகைத்தோம்
தூரத்தில் எங்கோ ஒலித்த
பட்டமளிப்பு விழாவின்
கல்லூரிக் கரவொலியைக்
கேட்டுக் கொண்டே......
0 comments:
Post a Comment