வெயிலில் விடுபட்ட வெளிச்சங்கள்!
மாண்டேஜ்களில் கிராமத்து பால பருவத்தை "வெயில்"திரைப் படத்தின்மூலம் "வெயிலோடு விளையாடி"பாடலில் க்ளிக் செய்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.....
அதுபோல வெயிலில் விடுபட்ட வெளிச்சங்களாய் இதோ சிலவற்றை நானும் விரிக்கிறேன்...................
அடைக்கோழி!
அடைக்கோழியின் அடிச்சூட்டில் தவமாய்க்கிடக்கும் முட்டைகளோடு நானும் ஒருவனாய் தவம் கிடந்திருக்கிறேன்..
உலகம் பார்க்க உந்தும் முயற்சியில் தன் நெஞ்சு நிமிர்த்தும் குஞ்சுகளின் ஓடுகள் தட்டும் ஓசைகள் கேட்டிருக்கிறேன்.......
புதிய உயிரின் ஜனனம் பார்க்க விழிகளை விரித்து வைத்திருக்கிறேன்....
முட்டை உடைத்து முதல் ஒலி எழுப்பும் சப்தம் தாய்க்கோழியை மட்டுமல்லாது என் இதயத்திற்குள்ளும் ஏதோ நிகழ்த்துவதை உணர்ந்திருக்கிறேன்....
நிறைவுறா தவத்தோடும், பிறவிப்பயன் எய்தா விரக்தியோடும் வெம்மையாய் விரிந்து கிடக்கும் "கூமுட்டைகளோடு" நானும் என் சோகம் பகிர்ந்திருக்கிறேன்......
குத்துக்கல் சாமி !
கொள்ளைக் காட்டிலோ வயல்வெளியின் ஓர் ஓரத்திலோ அடையாளத்திற்காக வைக்கப்படும் குத்துக்கல்லே எங்கள் பாலபருவத்தின் குலச்சாமியாக கருதப்படும்........
சாமிக்கு விழா எடுக்க திடீர் கூட்டம் அரங்கேறும்...விழாஏற்பாடுகள் உடனேத் தொடங்கி விடும்..சாமியைக் குளிப்பாட்டி...சந்தணப் பொட்டிட்டு..எங்கோ கிடைத்த கிழிசல் ஆடைகளே அலங்காரமாகி...அற்புதமாய் எங்கள் ஆராவாரம் தொடங்கிவிடும்........
பனைஓலைகளின் குருத்துக்கள் எடுத்து நாதஸ்வர வித்துவான்கள் நாதஸ்வரம் உருவாக்குவதும்,பூவரசு இலையில் சில லோக்கல் வித்துவான்கள் ஒத்துக்கள் செய்வதும் பரபரப்பாய் நடைபெறும்..
கொட்டாங்குச்சியின் தாளமும்,வாய்வழி ரண்டக்காவும்..குலவிச்சப்தமும்,குருத்தோலை நாதஸ்வரமும் விழாவை அமர்க்களப் படுத்தும்..
வேப்பிலைகளோடு சாமிகொண்டாடிகள் உச்சகட்டத்தில் அருள்வந்தாட...
கூமுட்டைகள் குத்துக்கல் சாமியின் மீது குவியலாய் எறியப்படும்..
முட்டை அபிஷேகம் செவ்வனே முடிந்தததும் வயல்வெளியின் சகதியில் உருண்டு.. புரண்டு..சகதியையே சந்தணமாக்கி எங்கள் ஆராவாரத்தை அர்ப்பணிப்போம்...
இறுதியில் கண்கள் சிவக்க குளத்தில் குளித்து ,குத்துக்கல்லை முழுதும் மறந்து வீடு வருவோம்....திட்டோ, புட்டோ எது கிடைத்தாலும் வாங்கிக்கொண்டு அந்த நாளை அத்துடன் முடிப்போம்.......
.........வெளிச்சம் இன்னும் விரியும்