தேடலும் தேடல் நிமித்தமும்..

Saturday, December 16, 2006

இப்படிக்கு ஆயுள்கைதி!

"கடிதம்" இந்த சொல் இப்பொழுது வழக்கில் உள்ளதா என்பதே சந்தேகம்தான்..! கால மாற்றம் சிலவற்றை சுருங்கச் செய்துவிட்டது.. அப்படி சுருங்கியவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்....

கடிதம் என்பதே ஓர் இலக்கியம் என்பதை இங்கே எத்தனை பேர் அறிவோம்? அது கதை சொல்லும் , காதல் சொல்லும் , நட்பு சொல்லும்.......,

சந்தோஷம், அழுகை, கோபம், தாகம், வெட்கம் , ஏக்கம், தவிப்பு, என உணர்ச்சிகள் சொல்லி உயிரை நீட்டிக்கும்....

கடிதம் என்பதே உறவுகளைப் புதுப்பிக்கும் ஓர் களம் அல்லவா?

கனவுகள் பூப்பிக்க, கற்பனை தருவிக்க, கடந்த காலத்து மிச்சங்களை....,

காலச்சுவடுகளில் நம்மைப் பற்றிய பதிவுகளை....., நம்மை நாமே அறிந்துணரும் ஓர் பொக்கிஷம் அல்லவா..!

புல்லரிக்க செய்வதும், பூப்பூக்க செய்வதும், செல்லரிக்க செய்வதும், செத்துப்போக செய்வதும் கடிதம் அன்றி வேறேது?..

உன்னை நீ அறியவும் , மற்றவர் உன்னை அறியவும்,..அறிதலும் அறிதல் நிமித்தம் பணித்தலும் கடிதம்தானே!

கடிதம் நம் இறந்த காலத்து உயிர்ப் பிம்ம்பங்களை நிகழ்காலத்தில் காணச்செய்யும் அதிசயக் கண்ணாடி !

இப்பேர்பட்டக் கடிதத்தை நம்முள் எத்தனை பேர் இன்று எழுதுகிறோம் ???? நாம்தான் நினைத்த உடனேயே தொலைவில் இருப்பவரை தொடர்பு எல்லைக்கு உட்பட்டவராக்கி தொலைபேசியில் தொடர்கிறோமே! பிறகு எங்கே கடிதம் எழுதுவது...?
சரி!சரி! விஷயத்திற்கு வருகிறேன்..எத்தனையோ கடிதங்கள் நம்மைப் பாதித்ததுண்டு, பாதிப்பதுண்டு..
அப்படி சமீபத்தில் என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது ஓர் கடிதம்....
from வேலுர் மத்திய சிறை என்ற சுயத்தோடு நம்பிக்கை என்ற விலாசத்திற்கு மன்னிக்கவும் ஜனா என்ற சிறுவனுக்கு வந்திருந்தது அக்கடிதம்...
அன்புள்ள ஜனாவுக்கு எனத் தொடங்கும் அக்கடிதம் பல உணர்ச்சிக் கவிதைகளை உள்ளடக்கி இப்படிக்கு ஆயுள் கைதி என முடிந்திருந்தது...
யார் இந்த ஜனா ?


6 வருடங்களுக்கு முன்பு வரை எல்லோரையும் போல் துள்ளிக்குதித்தவன் தான் இந்த ஜனா எனும் சாதா சிறுவன் ஆனால் இன்றோ இரு கைகள் ஒரு கால் என முக்கிய அவயம் முழுதும் இழந்து முடமாய் அல்லாது முயற்சியால் உயர்ந்து நிற்கும் சாதனைச்சிறுவன்..

அச்சிறுவனுக்குத்தான் ஆயுள் கைதியின் மடல்......
ஆம் ஓர் மின்சார விபத்தில் முடமானான்...ஆனால் அவனோ கைகள் இல்லா விடில் என்ன முடங்காது தன் வாயால் எழுத்துக்களை, வண்ணங்களை,எழுத ஆரம்பித்தான்..
இன்றோ இருமுறை ஜனாதிபதி விருதும்...பல ஓவியப்போட்டிகளுக்கு நடுவராகவும் உயர்ந்து நிற்கிறான்.
இவன் சாதனை எல்லாப் பத்திரிக்கைகளிலும் பதிவாகியுள்ளது..அப்படியோர் பதிவுதான் இந்த ஆயுள் கைதியைப் பாதித்துள்ளது...அதன் விளைவுதான் இம்மடல்..
அதிலும் குறிப்பாக ஆயுள் கைதியின் ஓவியம்,உயர்தர வரிகள்...என்னை மிகவும் பாதித்தது...
"என் இரு கைகளையும் உனக்குத் தருகிறேன் பதிலுக்கு உன் நம்பிக்கையை எனக்குத் தா என அந்த கைதி வேண்டுவது உணர்ச்சியின் உச்சம்!....(ஒரு குறும்பட தகவலுக்காக அந்த சாதனை சிறுவனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது...அப்போதுதான் அக்கடிதம் பார்த்தேன்)
ஜனாவைப் பற்றிய நிஜங்கள் அறிய இங்கே சுட்டவும் www.azhagi.com/jana ....


4 comments:

said...

இத்தகவல் எனக்கு புதியது.
ஜனாவைப் பற்றி கேட்ட பின் மனதுக்கு மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.ஆனால் அவன் சாதனை
புரிந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.
குறும்படம் என்றீர்களே அதன் பெயர் என்ன வெளியாகிவிட்டதா?

said...

நன்றி லட்சுமி !.. dec 25 ல் ஜனாவைப் பற்றிய நிஜங்களை குறும்படமாக படமாக்கவுள்ளோம்...."பீனிக்ஸ்" என்ற பெயரில் விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்...தொடரட்டும் உங்கள் பின்னூட்டம்............

said...

ஜனா மாதிரி உள்ளவங்களை எல்லாம் பார்க்கும் போது எல்லாம் இருந்தும் நாம ஏன் ஒரு சராசரியாவே இருக்கோம்னு என் மேலயே கோபமா வருது.....

இருந்தாலும் கடவுள் இப்படி ஜனா விஷயத்துல கொடுமைக்காரரா இருந்திருக்க கூடாது.......

said...

ஜனாவை நேரில் பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது..அவன் மருத்துவ மனையில் எரிந்து கிடக்கிறான் அவனது பெரியப்பா சொன்னாராம் அவன் அப்பாவிடம் "முழுதும் எரிந்து விட்டது "இதை" வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்? பேசாமல் கொன்று விடு" என்று.....அந்த அஃறிணைதான் இன்று உயர் திணையாய் உயர்ந்து நிற்கிறது....ஓர் தற்கொலையைக்கூட ஜனாவைப் பற்றிய கட்டுரை தடுத்திருக்கிறதாம்.....