தேடலும் தேடல் நிமித்தமும்..

Friday, October 2, 2009

அந்த வி.ஐ.பி!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்...
பிரிட்டிஷாரின் கட்டிடக் கலைக்கு சான்று சொல்லும் அடையாளங்களில் ஒன்று...

ரயில் நிலையம் ஒரு பிரம்மாண்டம்தான்!
பலதரப்பட்ட மனிதர்கள்,பலதரப்பட்ட மொழிகள்,ரயில் வந்து செல்லும் ஓசை,ரயில் நிலையத்திற்கேயுரிய வாசனை,நீண்டு நெடிந்திருக்கும் ரயில் பெட்டிகள்,எல்லாவற்றிர்க்கும் மேலாக அழுகையாய்,ஆனந்தக் கண்ணீராய்,பிரியா விடையாய்,பிரிய மறுக்கும் இடமாய் என ஒட்டுமொத்தமாய் உணர்வுகளைக் குவித்து பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தும் ரயில் நிலையம் ஒர் பிரம்மாண்டம்தான்...
இந்த பிரம்மாண்டத்தை நான் எப்பொழுதெல்லாம் காண நேர்கிறதோ, அதுவும் சொந்த ஊரில் தாயின் பராமரிப்பில் சில நாட்கள் இருந்துவிட்டு எப்பொழுதெல்லாம் எழும்பூர் ரயில் நிலையம் வரநேர்கிறதோ அப்பொழுதெலாம் என்னுள் ஓர் பயம் ஒட்டிக்கொள்ளும்....

இங்கே உன் தாய் இல்லை,தந்தை இல்லை,உற்றார் உறவினர்கள் இல்லை,கண்டிப்பாய் சுதந்திரம் இல்லை என உறக்கசொல்வது போல் இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை நான் பார்க்கும் பொழுதுகள்....

சுற்றுலாத் தவிர்த்து,பணி நிமித்தம் நெடுந்தொலைவில் இங்கு வந்து தடம் பதிக்கும் பெரும்பாலோரின் பொழுதுகள்,குறிப்பாக இளைஞர்களின் பொழுதுகள் இப்படித்தானிருக்குமென நினைக்கிறேன்...

தாய் வீடு என்பது உண்மையில் பெரும் பாதுகாப்பு, அதுவும் நெடுந்தூரத்தில் இருந்து வேலைபார்க்கும் இளைஞர்களுக்கு தாய் வீடு செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது...

உண்மையில் விவரம் எதுவுமே தெரியாமல் கருவறையில் இருக்கும் பாதுகாப்பை விடவும்,விவரம் தெரிந்தபிறகு தாயின் மடியில் அவ்ர்தம் பார்வைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பாதுகாப்பு மிக உயர்ந்தது...

உலகையே உருட்டி உண்ணக் கொடுத்தாலும் தாயின் ஒற்றைப் பருக்கைக்கு ஈடாகுமா? ஒற்றை உருண்டையில் உயிரை நீட்டிக்கும் பக்குவத்தை பக்கத்திலிருந்து கலந்து கொடுப்பவள் அல்லவா தாய்!

அத்தகையத் தாயை,தாய் மண்ணைப் பிரிந்து பல்வேறு கனவுகளோடு,இதே எழும்பூர் ரயில் நிலையத்தில் தடம் பதித்தவர்தான் இன்று நான் பார்த்த அந்த வி.ஐ.பி,....

ஆங்கில இலக்கியம் முடிந்த கையோடும், அடுத்த நிலைக்கான கேள்விகளோடும் சென்னையைத் தஞ்சம் அடைத்தவருக்கு வாய்ப்பளித்தது ஒரு சுற்றுலா ஏஜென்சி, சிறப்பான ஆங்கிலப் புலமை,நேர்த்தியான நடை,உடை,பாவனை,ஆளுமை என அனைத்தும் அவரை சிறந்த tourist guide ஆக மக்களிடையே அடையாளப் படுத்தியது,

வேலைக்குத் தகுந்த ஊதியம்,தேவைக்குத் தகுந்த மனைவி, ஆஸ்தி -அஸ்தி கரைப்பதற்காவே இரு குழந்தைகள், என அவரது சென்னை வாழ்க்கை சந்தோசமாய் நகர்ந்தது..

மகனையும் மகளையும் மேல்நிலைக் கல்வி படிக்க வைக்கும் வரை அவருக்கு வேலை பறி போகவில்லைதான்... ஆனால் அதற்கு பிறகு வேலை பறிபோனது.

அந்த கணமே மனைவிக்கு அவ்ர்மீதிருந்த மரியாதையும் போனது.

கிராமத்து அக வாழ்க்கையைக்காட்டிலும் பெரு நகரத்து புற வாழ்க்கையப் பார்த்து பழகியிருப்பார் போலும் அவ்ரது மனைவி..ஒவ்வொரு நாளும் அவ்ரை வெறுத்து ஒதுக்கியிறாள்,

குழந்தைகளும் தாய் சொல்லிற்கு மறுப்பேதும் சொல்லாது தந்தையை தவிர்த்திருக்கிறார்கள்..

வேலையின்மை,மனைவியின் போக்கு,குழந்தையின் கண்டு கொள்ளாமை என எல்லாம் சேர்ந்து அவரை ஒருவித மனச்சிக்கலுக்கு,உளவியல் பாதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறது.

மனைவியின் இரக்கமில்லா சப்தத்தில் ஓர் நாள் அவர் வீட்டைவிட்டே வெளியேறிவிட்டார்..

வீதிகள் இவர்களுக்காகத்தானேக் காத்திருக்கிறது பிறகென்ன?

நொந்த இதயத்தோடும் ,நொடிந்து போன வாழ்க்கையோடும் நடை போட்டிருக்கிறார்..

மனைவி, குழந்தைகளைப் பிரிந்து 15 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது இப்பொழுது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது கூட அவருக்குத் தெரியாது..

அவர்களுக்கும் இவர் எங்கிருக்கிறார் எனும் எண்ணம் துளியளவேனும் கிடையாது போலும் 15 வருடங்களாக அவர் சார்ந்த ஒருவரும் அவரை சந்திக்க வரவில்லை....

இந்த 15 வருடம் அவர் வாழ்க்கையை எப்படி நகர்த்தியிருப்பார் என்னும் போது என் விழிகள் கலங்கிற்று..

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் எதிர்புறமாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் அந்த வி.ஐ.பி யின் வரலாறு கேட்க நேரிட்டது...

நீண்டு வளர்ந்திருக்கும் வெள்ளைத் தலை முடி, அடர்த்தியான மீசை, சவரம் செய்யப்படாமல் அவரின் அக வாழ்வோடு அவரின் காலத்தின் மதிப்பீட்டையும் சொல்லும் விதமாக வளர்ந்து விரிந்திருக்கும் வெண்தாடி,

முன்பு வெள்ளை நிறத்தில் இருந்திருக்கும் போலும் தற்பொழுது புற உலகின் யதார்த்தம் பூசியிருக்கும் சட்டை, அதை உட்புகுத்தி வெளிரியிருக்கும் பெல்ட், அடர் நீல வர்ணத்தில் பேன்ட், இடது தோள்பட்டையில் ஒரு அழுக்கு மூட்டை, ஒளிவீசும் கண்கள், குழந்தைத் தனமானப் புன்னகை என ஒரு ஞானியைப் போல என் எண்ணங்களில் ஊன்ற ஆரம்பித்தார்...

யாசகம் செய்யும் எத்தனையோ பேரை தினமும் நாம் சந்திக்கிறோம் முடிந்தால் தர்மம் செய்கிறோம் இல்லையேல் "சில்ற இல்லப்பா என தவிர்த்து ஒதுங்குவோம்

ஆனால் இவரோ சுருங்கிய முகமோ, ஏக்கமோ, யாசக வாசகமோ எதுவுமே இல்லாது நேராக நின்று, இரு கரங்களையும் கூப்பி என்னைப் பார்த்து கும்பிட்டு சினேகமான ஒரு புன்னகையை உதிர்த்தார், நானும் பதிலுக்கு புன்னகைத்தேன் மீண்டும் கைகளைக் கூப்பினார்..அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை ஒரு 50 பைசாவை அவரிடம் கொடுத்தேன்....

அதைப் பெற்றுக் கொண்டதும் மீண்டும் இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கைகூப்பியவர் சில கும்பிடலுக்குப் பிறகே நகர்ந்தார்...

இடை இடையே குழந்தை தன் தாயிடம் எதேதோ சொல்லிக்கொண்டிருக்குமே அத்தகையதொரு மொழியில் யாரிடமோ,என்னென்னவோ சொல்லிக்கொண்டேயிருக்கிறார்....
ஒரு வேளை தொலைந்து போன மனித நேயம் அவரது விழிகளுக்கு மட்டுமேத் தெரிகிறதோ என்னவோ?
நான் அவரை முழுதுமாக அவதனித்தேன் .....

என்னருகே சக பயணி ஒருவர் இன்னொருவரிடம் கோயம்பேடு செல்வதற்கான பேருந்து வசதி பற்றி கேட்கிறார் அதை உன்னிப்பாய் கவனித்த அவர், அவர்களருகே ஓடிவந்து தெளிவாய் பேருந்து நிறுத்தம், வழித்தடம் குறித்து பேசிவிட்டு நகர்கிறார்.....

ஓர் வயதான அம்மா ஓடிவருகிறார் அந்த மூதாட்டிக்காகப் பேருந்தை மறைத்து பத்திரமாக போங்கம்மா என்பது போல் சைகை காட்டுகிறார்..

என் சிந்தனை முழுதும் அவர் மீதே பதிந்திருந்தது..அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது எனக்கு..இருப்பினும் கொஞ்சம் பயந்த படியே இருந்தேன்..

மீண்டும் அவர் என்னருகே வரவே ஐயா உங்ககூட கொஞ்சம் பேசனுமே என்றேன்....எங்கிட்ட என்ன சார் பேசப் போறீங்க என்றார்,

எதோ பேச வேண்டும் போல் தோன்றுகிறது என்றேன்..
நான் ஒரு பரதேசி என்றார்....

உங்கள் பெயர் என்ன என்றேன்?
ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு
ராஜ திருஞான சம்பந்தம் என்றார்..

அழகான பெயர் ஞானம் உங்கள் பெயரோடு மட்டுமல்ல உங்களிடமும் சம்பந்தப்பட்டுள்ளது என்றேன்..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆனால் நான் அதைக் கடந்து விட்டதாய் உணர்கிறேன் என்றார்...

தியானம் செய்வீர்களா என்றேன்,,,
தியானம் போன்றது என் வாழ்வு என்றார்...

உங்க ஊர் ஐயா?
தஞ்சா ஊருக்கு அருகில்...

சார் 1978ல நா இங்கே வந்தேன் ..பி ஏ ஆங்கில இலக்கியம் முடித்து இங்கே வந்து...என தனது வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் பகிர்ந்து
கொண்டவரிடம்

ஐயா புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டா?என்றேன்
YOU KNOW IAM A BOOK WARM!
நா நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கேன்....
சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்...

ஐயா இவ்வளவு படிச்சிருக்கீங்க மீண்டும் ஏதேனும் வேலையில் சேர்ந்திருக்கலாமே என்றேன்..
சில கம்பேனிகளுக்கு முயன்றேன் பலனில்லை பிறகு இந்த வாழ்க்கை எனக்குப் பழகி நிரந்தரமாயிற்று என்றார்..

ஏதேதோ சைகை காட்டி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே அப்படி என்னதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன்..
அது.....!உங்கள மாதிரி காசு கொடுக்குறவங்களை thanks சொல்லி வாழ்த்துவேன்....என்னையறியாமல் அவர் இவ்வளவு கொடுத்தாரு ,இவர் அவ்வளவு கொடுத்தாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன்....

எப்பவுமே வீதிகளில்தான் தங்குவீர்களா என்றேன்..
அப்படித்தான் தங்கியிருந்தேன் ஆனால் உங்களைப் போல் ஒருத்தர் ஒருநாள் எங்கிட்ட பேசினாரு அவருதான் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே இரவுமட்டும் தங்க அனுமதி கொடுத்திருக்காரு அங்கதான் தங்குவேன் என்றார்..

10 நாளைக்கு ஒரு முறை குளிப்பேன்,
காலையில் சாப்பிட மாட்டேன்,
மதியம் கொஞ்சமா சாப்பிடுவேன், இரவு நினைத்தால் சாப்பிடுவேன் இல்லையேல் விட்டு விடுவேன்...என்றார்

சரி வாங்க ஐயா நாம ரெண்டுபேரும் சாப்பிடலாம் என அழைத்தேன்..
இல்ல சார் வேணாம் சார் காலையில சாப்டமாட்டேன் என்றார்..
எனக்காக வாங்க என்றேன்..
இல்ல நீங்க பேசினது சந்தோசம் என்றார்...

சரி வாங்க 100 ரூபாயா எங்கிட்ட இருக்கு சில்லறை மாத்திக் கொடுக்கிறேன் என்றேன் மறுத்துவிட்டார்...(நான் வளர்ந்து வரும் சினிமா நடிகன் எனது பொருளாதார்ம் அன்று 100 ரூபாய்க்கு உட்பட்டே இருந்தது)

பிறகு என்னிடம் இருந்த சில்லறைகளை மொத்தமாய் அவரிடம் கொடுக்கமுற்பட்டேன் முதலில் வாங்க மறுத்தவர் பிறகு வாங்கிக் கொண்டார்...

மீண்டும் ஒருமுறை கைதூக்கி கும்பிட்டு உளர ஆரம்பித்தார் நான் அவரை உணர ஆரம்பித்தேன்....

பெரும்பாலான ஞானிகளை இந்த உலகம் பைத்தியக்காரர்களாய்த்தான் பார்க்கிறது..ஆனால் ஓசோ போன்றவர்கள் பைத்தியத்தனம்தான் ஞானிகளின் அடையாளம் என்கிறார்கள்....
உலகைத் துறந்தவன் துறவி உலகை உணர்ந்தவன் ஞானி...
புற மதிப்பீடுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டுவரும் இவ்வுலகத்தால் அகம் சார்ந்த அளவீடுகளை அறிய முடியவில்லை.....
புறம் என்பது வெறும் மாயைதான் என்பதைக்கூடபுறம் நம்மை ஒதுக்கித்தள்ளும் பொழுதுகள்தான் உணர்த்துகிறது...
புறத்தை அழகுபடுத்தத் தெரிந்த நமக்கு அகத்தை அழகுபடுத்த தெரியவில்லை....
அல்லது அகம் என்பதையே அறியவில்லை.....

மனிதம் சுறுங்கி மானுடத்துயர் அதிகரிக்கும் நாட்களில் கடவுள் அவதரிப்பார் என்கிறார்கள்...
கடவுள் அல்ல புற மதிப்பீடுகளால் ஒதுக்கப்பட்ட நம் வி.ஐ.பி திரு ரஜ திருஞானம் ஐயா போன்று பல மகான்கள் அவதரிக்கக்கூடும்...அன்று புறம் முற்றிலுமாய் தன் சுயத்தை இழக்கும்.....

(தினமும் காலையில் 7 மணிமுதல் 10 மணிவரை அவரை எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பாக பார்க்காலாமாம்...நானும் அவரை இன்னொரு முறை சந்திப்பேன்....)